மனைவியை உதறிய கணவன்.. திடீர்னு அக்காவை கட்டிப்பிடித்த தங்கச்சி.. நீதிபதி முன்பு ஹைகோர்ட்டில் சம்பவம்
சென்னை: கணவன் - மனைவி இடையேயான குடும்ப பிரச்சனை ஒன்று நீதிமன்றத்தில் நடந்துள்ளது.. அப்போது நடந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தையே நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
மனக்கசப்பு நிறைந்த ஒரு தம்பதி சென்னை ஹைகோர்ட்டுக்கு நேற்றையை தினம் வந்திருந்தனர்.. சென்னையை சேர்ந்த தம்பதியினருக்கு, 6 வயது, 3 வயது என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. தம்பதியர் இடையே நிறைய மனக்கசப்பு இருப்பதால், 6 வயது குழந்தை அப்பாவிடமும், 3 வயது குழந்தை அம்மாவிடம் வளர்கிறது.

ஆனால், கணவரிடம் உள்ள 6 வயது குழந்தையையும் மீட்டு, தன்னிடம் ஒப்படைக்க கோரி, சென்னை ஹைகோர்ட்டில் தாய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பாவுடன் 6 வயது குழந்தையும், அம்மாவுடன் 3 வயது குழந்தையும் ஆஜராகினர்.
நீதிபதிகள்: அப்பாவுடன் வந்த 6 வயது குழந்தையை, தன்னருகில் நீதிபதிகள் அழைத்து, "உன் தோழிகள் யார் யாரு? உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?' என்றெல்லாம் கேள்விகள் கேட்டார்கள்.. அதற்கு நீதிபதிகளிடம், மழலை மாறாத மொழியில் சிறுமி பதிலளித்தாள்.
இதற்கு பிறகு தம்பதியினரின் வழக்கு விசாரணை ஆரம்பமானது. அதற்கு கணவர், "மனைவி என்னை அவமதித்து பேசுகிறார்.. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் என்னிடம் உள்ளன" என்று கணவர் புகார் சொன்னார்.. உடனே மனைவியும், "என்னை கணவர் கெட்ட வார்த்தைகளால், திட்டுகிறார்" என்று பதிலுக்கு புகார் சொன்னார்.
சிசிடிவி காட்சி: இதைக்கேட்ட நீதிபதிகள், "சிசிடிவியுடன் குடும்பம் நடத்த முடியாது.. இப்படி ஒருவரை ஒருவர் மாறி, மாறி குற்றம்சாட்டுவது சரிகிடையாது.. குழந்தையை பார்த்தால், அவரது அப்பா நன்றாகத் தான் கவனித்துக் கொள்வது போல் தெரிகிறது. குழந்தையிடம் பேசியதில், அப்பா, அம்மா இருவரையுமே பிடிக்கும் என்று சொல்கிறாள்.. அதனால், குழந்தைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இருவரும் ஒன்றாக வாழ வேண்டும்" என்று அறிவுரை வழங்கினர்.
இதற்கு மனைவி தரப்பில் ஒப்புக் கொள்ளவில்லை.. கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்ற சொல்லிவிட்டார்.. எனினும், தம்பதி இருவரும், 2 குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார்ந்து பேசிவிட்டு, சாயங்காலம் வரும்படி நீதிபதிகள் கூறிவிட்டனர். இதையடுத்து, தம்பதி இருவரும் மாலையில் நீதிபதிகள் முன்பு மறுபடியும் ஆஜராகினர்.
அப்போதும், தம்பதியர் இருவரும் ஒன்றுசேராமல், சுமூக உடன்பாடும் ஏற்படாமல் இருப்பதை அறிந்த நீதிபதிகள், சட்ட விரோதமாக குழந்தையை அவரது அப்பா வைத்திருக்கிறார் என்று சொல்ல முடியாது... விருப்பத்தை ஆராய்ந்து தெரிவிக்கும் அளவுக்கு சிறுமி பக்குவப்படவில்லை' என்று கூறிய நீதிபதிகள், தாய் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தாய் கண்ணீர்: எனினும், தன்னுடைய குழந்தையை, தன்னுடன் அனுப்பி வைக்கும்படி, 2 கைகளை கூப்பியவாறு, நீதிபதிகளிடம் தாய் கண்ணீருடன் கெஞ்சிக் கேட்டார்.
அதற்கு நீதிபதிகள், இப்படியெல்லாம் உத்தரவை, இந்த நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது.. குழந்தையை தன் வசம் கொண்டு வருதல், பார்வையிடும் உரிமை கோரல் போன்றவை தொடர்பாக, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, உரிய நிவாரணத்தை கோருங்கள்" என்று அறிவுறுத்தினார்கள்.
நீதிமன்றத்தில் தம்பதி இடையே, இப்படி பரபரக்கும் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அவர்களது 6வயது, 3 வயது 2 குழந்தைகளும், ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து முத்தம் தந்து கொண்டிருந்தனர்.
அக்கா, -தங்கைகள் இருவருமே கைகளை பிடித்துக் கொண்டு, இறுக்கி அணைத்து கொண்டும் பாச மழையில் நனைந்து கொண்டிருப்பதையும், 2 குழந்தைகளுமே, தங்களது அம்மா, அப்பாவின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டு, பேசிக்கொண்டிருந்ததையும், நீதிமன்றத்தில் அனைவருமே நெகிழ்ந்து பார்த்து கொண்டிருந்தனர்.
உருக்கம்: இறுதியாக, நீதிமன்றத்துக்கு வெளியே அந்த தாய் அழுதபடியே நின்றிருந்தார். அப்போது, 6 வயது மகளை அழைத்துக் கொண்டு தந்தை கிளம்ப முயன்றார். இதைப்பார்த்த 3 வயது சிறுமி, ஓடிச்சென்று தன்னுடைய அப்பாவையும், அக்காவையும் கட்டிப்பிடித்துக் கொண்டு, அவர்களை நீதிமன்ற வளாகம் வரை கொஞ்சியபடி அழைத்து சென்றதை பார்த்து அனைவருமே கண்கலங்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications