திருந்தாத ரவுடி கணவர்..சென்னையில் உயிரை மாய்த்த பெண் போலீஸ் வாழ்க்கையில் சொல்ல முடியாத சோகம்!
சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் போலீஸ் குடியிருப்பில் தூக்கிட்டு பெண் காவலர் செல்வி என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது பல உருக்கமான தகவல்கள் வெளியாகின. தான் காதலித்து கரம் பிடித்த கணவர், கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு என அடிதடியில் ஈடுபட்டு ரவுடியாக மாறியதாலும், பலமுறை அவரை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டும் தோல்வியடைந்ததால்தான் மனவேதனையில் செல்வி உயிரை மாய்த்துக்கொண்டதும் தெரியவந்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் செல்வி (வயது 39). இவர் சென்னை புளியந்தோப்பு போலீஸ் குடியிருப்பில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆகும். இவரது கணவர் நல்லுச்சாமி. நேற்று முன் தினம் திடீரென செல்வி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

முறைமாமனை காதலித்து கரம்பிடித்தார்
இதனால் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது தற்கொலைக்கான காரணம் குறித்த உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது செல்வி தன் முறைமாமனான நல்லுச்சாமியை காதல் திருமணம் செய்திருக்கிறார். ஆனால் 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்த அவர் ரவுடியாக மாறியதாலும், பலமுறை அவரை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டும் தோல்வியடைந்ததால்தான் மனவேதனையில் செல்வி உயிரை மாய்த்தது தெரியவந்துள்ளது.
கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு என பல வழக்குகளில் அவர் பெயர் இடம்பெற்றதாலும், அவரை எப்படியாவது திருத்திவிட வேண்டும் என்று பாசத்தோடு முயற்சி செய்த செல்விக்கு இறுதி வரை பலன் கிடைக்காததாலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவருடன் பணி செய்து வரும் சக பெண் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அன்பாக கண்டித்த செல்வி
செல்வியும், அவரது முறைமாமனுமான நல்லுச்சாமியும் ஒரே பள்ளியில் தான் படித்து வந்தார்கள். அப்போது 12ம் வகுப்போடு நல்லுச்சாமி நிறுத்திவிட, செல்வி கல்லூரிக்கு சென்றார். எனினும் இருவரும் பள்ளி படிப்பின்போதே காதலித்து வந்துள்ளனர். கல்லூரி படிப்பின் போது போலீஸ் வேலைக்கும் செல்வி படித்து வந்துள்ளார். இதில் போலீஸ் வேலை செல்விக்கு கிடைத்தது. இதையடுத்து சிவகங்கையிலேயே அவருக்கு போலீஸ் நிலையத்தில் வேலை கிடைத்தது.
பின்னர் தன் முறைமாமன் நல்லுச்சாமியை அவர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். மதுரையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். இதற்கிடையே நல்லுச்சாமி நாளுக்கு நாள் அடிதடியில் இறங்கி வந்துள்ளார். ஆனால் ஆயிரம் தான் ஆனாலும் தான் காதலித்து கரம்பிடித்த கணவர் என்பதால், அவரை கண்டிக்க மனம் வராமல் பாசத்தோடு இனி ரவுடிசம் செய்யாதீர்கள் என்று அன்பாக கூறியிருக்கிறார் செல்வி.
3 கொலை வழக்குகள்
மனைவி இப்படி கேட்கும் போது பச்சை குழந்தைபோல் சரியம்மா.. இனிமேல் எந்த ஒரு பிரச்சினைக்கும் செல்ல மாட்டேன் என்று சொல்லிவிடுவாராம் நல்லுச்சாமி. ஆனால் வீட்டில் மட்டும்தான் இப்படி. வீட்டை விட்டு வெளியில் சென்றால் எதாவது ரவுடிசத்தில் ஈடுபட்டு வருவாராம். இவர் மீது 3 கொலை வழக்குகள்,9 கொலை முயற்சி வழக்குகளில் இவரது பெயர் அடிபட்டுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் அக்கியூஸ்ட் நம்பர் 1 என்ற ரவுடி பட்டியலில் இவர் பெயர் வந்தது.
இதனால் மீண்டும் மனவேதனை அடைந்த செல்வி, கணவரை கண்டிக்காமல் மீண்டும் பாசத்தோடு, இனிமேலாவது எந்த ரவுடிசத்துக்கும் போகாதீங்க என்று கூறியிருக்கிறாராம். ஆனால் மீண்டும் அவர் குற்றச்செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த 2022-ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வியை அழைத்து கண்டித்து இருக்கிறார். இதனால் மனவேதனை அடைந்த செல்வி, சென்னைக்கு பணியிட மாறுதல் கேட்டு சென்னை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார்.
கைது செய்த போலீஸ்
இதையடுத்து சென்னை புளியந்தோப்பில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் வழக்கு ஒன்றில் நல்லுச்சாமியை பிடிக்க போலீசார் தேடி அலைந்துள்ளனர். இதனால் திடீரென நல்லுச்சாமி சென்னை புளியந்தோப்பு காவல் குடியிருப்புக்கு வந்திருக்கிறார். ஏன் திடீரென வந்திருக்கிறீர்கள் என்று கேட்ட செல்வியிடம் போலீஸ் தன்னை தேடுவதாக கூறியிருக்கிறார்.
எனினும் நல்லுச்சாமியின் செல்போன் எண்ணை வைத்து அவர் சென்னையில் இருப்பதை அறிந்து அவரை கைது செய்தனர். இதையடுத்து செல்வி தான் அவரை ஜாமீனில் எடுத்துள்ளார். ஜாமீனில் வந்ததும் இனி இப்படி செய்யமாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும், மானாமதுரையில் மணல் குவாரி எடுத்து நடத்தப்போகிறேன் என்று செல்வியிடம் சொல்லியிருக்கிறார். இதனால் செல்வி மகிழ்ச்சியடைந்துள்ளார்.
மனைவி உடலை பார்த்து கதறி அழுதார்
மேலும் இனி நீயும் சிவகங்கைக்கு வந்துவிடு என்று கூறியிருக்கிறார். இதனால் செல்வி பணியிட மாறுதலுக்கு பேசி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் செல்விக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர், நாங்கள் சிவகங்கை போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் கணவர் நல்லுச்சாமிக்கு மனோ என்பவர் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. அவர் எங்கே பதுங்கி இருக்கிறார் என்று கேட்டுள்ளனர்.
இதைக்கேட்டு அப்படியே மனமுடைந்து போனார் செல்வி. கணவர் எப்படியாவது திருந்திவிடுவார் என்று நினைத்த செல்விக்கு கடைசி வரை ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மனைவி இறந்ததை கேட்டு சென்னை வந்த நல்லுச்சாமி மனைவி உடலை பார்த்து கதறி அழுதார்.












Click it and Unblock the Notifications