அடிக்கும் அனல் காற்று..வீசும் வெப்ப அலையில் இருந்து தப்பிக்க இதை மறக்காமல் செய்யுங்க!
சென்னை: இந்தியாவின் பல மாநிலங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அதிகரிக்கும் என்றும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. பல ஊர்களில் அனல் காற்று வீசுகிறது. வெப்ப அலைகளில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள், குஜராத், மகாராஷ்ட்ராவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, தெலுங்கானாவில் அதிகபட்ச வெப்பம் 40 முதல் 42 டிகிரி செல்சியஸாக உள்ளது. இதர மாநிலங்களில் 40 டிகிரிக்கும் குறைவாக உள்ளது. ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளது. ஒடிசாவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், ஏப்ரல் 16 வரை ஆங்கன்வாடிகள், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழையை கூட எப்படியாவது சமாளித்து விடலாம் ஆனால் தகிக்கும் கோடை காலத்தை சமாளிப்பது கடினம்.
வெப்ப அலையானது உடலியல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சமவெளிப் பகுதியில், குறைந்தது இரண்டு நாட்களுக்கு 40° செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும், மலைப் பிரதேசங்களில் 30° செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும், கடலோரப் பகுதிகளில் 37° செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும்போது வெப்பஅலை நிகழ்வு ஏற்பட்டதாகக் கருதப்படும்.
1992 முதல் 2015 வரையிலான காலகட்டங்களில், வெப்ப அலைக்கு கிட்டத்தட்ட 25000 பேர் பலியானதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் வீசிய வெப்ப அலை இந்தியாவின் பல்வேறு இடங்களில் 2000க்கும் மேலானவர்களை காவு வாங்கியது. மேலும், காலநிலை மாற்றம் காரணமாக வெப்ப அலை வீசும் சூழல் கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெப்ப அலைகளால் தமிழகம் பல பாதிப்புகளை சந்தித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில் சராசரியாக 8 வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு தமிழகத்திற்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. தமிழக அரசே வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சிக்கு பலியானதாக தகவல்கள் வெளியாகின.
வெப்ப அலைகளின் காலம் அதிகரிக்கும் போதும், தீவிரமடையும் போதும் வறட்சியும் அதிகரிக்கும். வெப்ப அலைகளுக்கு மத்தியில் மழை பொழிவுகள் குறையும். எனவே, நிலத்தில் உள்ள ஈரப்பதம் மற்றும் நீர் விநியோகம் விரைவில் தீர்ந்து வறண்டு போகும். ஆக, நிலம் அதிவிரைவாக வெப்பமடைந்து காற்றை சூடேற்றும். இது ஒரு தொடர் சுழற்சியாகி ஒட்டுமொத்த வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை கோடைகாலம் நீடிக்கிறது. சில நேரங்களில் பிப்ரவரி மத்தியில் தொடங்கி ஜூன் மாதம் 15ஆம் தேதி வரைக்கும் கோடை காலம் நீடிக்கும். அப்போது, வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் பகல்நேர வெப்பம் 45 டிகிரி செல்சியஸ் முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்கிறது.
பொதுவாகவே ஏப்ரல், மே மாதங்களில் நிச்சயமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்ப அலைகள் வீசக் கூடும். கடந்த ஆண்டு கூட வட மாநிலங்கள் வெப்ப அலைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டு காலமாகவே அக்னி நட்சத்திர காலத்தில் கோடை மழை பெய்த காரணத்தால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வந்திருக்கிறோம்.
இந்த ஆண்டு வெப்ப அலையை எதிர்கொள்ள இப்போதே நாம் தயாராக வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. வெப்பத்தை தாங்க முடியாத சூழலில் உள்ளவர்களை பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை ஏசி அறையில் தங்க வைக்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகளை பெரும்பாலும் பகல் நேரங்களில் வெயிலில் வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
இந்த வெப்ப அலைகளின் தாக்கத்தால் பக்கவாதம் உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகள் வரக்கூடும் என எச்சரிக்கும் மருத்துவர்கள், அடிக்கடி தண்ணீர் குடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் கடைபிடித்தாலே இதிலிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் மீண்டுவிடலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வெப்பத்தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வசதிக்கு அழைக்கவும். மேலும், உதவி வரும் வரை பின்வரும் முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். பாதிக்கப்பட்டவரை சமமான இடத்தில் தரையில் படுக்க வைக்கவும். அவரது உடல் வெப்ப நிலையை பரிசோதித்து, முடியும் பட்சத்தில் நிழலான / குளிர்ச்சியான இடத்திற்கு கொண்டு செல்லவும்.
குளிர்ச்சியான பொருட்களை அவர் மீது படும்படி வைத்து ஒத்தடம் தரவும். இதன் மூலம் அவரது உடல் வெப்ப நிலையை குறைக்க இயலும். குளிர்ச்சியான நீரை அவர் மீது தெளித்தும், ஈரமான துணியால் சுற்றியும், மின்விசிறியின் கீழ் அவரை கிடத்தியும் அவரது உடல் வெப்ப நிலையை குறைக்க இயலும். மயக்கம் தெளியும் பட்சத்தில் திரவ உணவுகளை வழங்கலாம்.
வெப்ப அலைகள் குறித்து பெரிதாக பதற்றப்படத் தேவையில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார். ஆண்டு தோறும் நமக்கே தெரியாமல் இதனை நாம் எதிர்க்கொண்டுதான் வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு, அதன் தாக்கம் சற்று கூடுதலாக இருக்கும் என்பது உண்மைதான் என்கிறார் பாலச்சந்திரன்.
குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் இதன் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். அதற்காகத்தான் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதனால் இயற்கை பேரிடர்கள் ஏதும் ஏற்படுமா என்பதை முன்பே கூற முடியாது. அரசாங்கம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தாலே இந்த வெப்ப அலையை எளிதாக சமாளித்து விடலாம் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதை அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அனுப்பி உள்ளது. வெப்ப அலையை எதிர்கொள்ள மாவட்ட அளவில் செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்.
இந்த செயல் திட்டங்கள் மத்திய அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும்.
வெப்பத்தால் பாதிக்கப்படுவோர் குறித்த தகவல்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு ஆகியவற்றை தினசரி பதிவேற்றம் செய்ய வேண்டும். அதீத வெப்பத்தால் சிகிச்சை பெறுபவர்களின் பட்டியல் ஒவ்வொரு மருத்துவமனையிலும் பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து மருத்துவ அலுவலர்களும் வெப்ப பாதிப்புகளை கண்டறிவதில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
அதீத வெப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஓஆர்எஸ் பாக்கெட்டுகள், ஐஸ் பேக்குகள் போன்ற அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவு கையிருப்பு வைக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக குடிநீர்,குளிரூட்டும் கருவிகள், ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஐஸ் பாக்கெட்டுகளை தயார் நிலையில் இருக்க வேண்டும். குளிரூட்டும் கருவிகள் மற்றும் இதர சாதனங்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலையை சமாளிக்க பொதுமக்கள் நா வறட்சி ஏற்படாமல் பகல் நேரங்களில் அதிக நீர் அருந்த வேண்டும். முடிந்தவரை வீடுகளுக்குள்ளே இருக்க வேண்டும். பழங்களை அதிகளவில் சாப்பிட வேண்டும். மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை சூரிய வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்ல வேண்டியிருந்தால் குடை, உடலை முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். சூடு, தோலில் எரிச்சல், ஏற்பட்டால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
பணிபுரியும் இடங்களில் சிறிய அளவில் பிரேக் எடுத்துக்கொண்டு தண்ணீர் சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பொதுவாக வெளியில் செல்ல வேண்டிய அவசியம் நேரிட்டால் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள், செல்லப்பிராணிகளை வைத்து பூட்டி விட்டு செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications