தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்த விபத்தில் பெண் காவலர் பலி - முதல்வர் நேரில் அஞ்சலி
சென்னையில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக தலைமைச் செயலகத்தில் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இந்த விபத்தில் பெண் காலவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார
சென்னை: சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தலைமைச்செயலகத்தில் இருந்த நூற்றாண்டு பழமையான மரம் வேரோடு சாய்ந்து அங்கிருந்தவர்களின் மீது விழுந்தது. இந்த விபத்தில் கவிதா என்ற பெண் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு காவலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த கவிதாவின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாற உள்ளதன் காரணமாக சென்னையில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்தது. இன்று காலையில் பலத்த மழை பெய்தது. கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த 75 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் விழுந்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கவிதா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
போக்குவரத்து காவலர் படுகாயம் அடைந்துள்ளார். 2 கார்கள் சேதம் அடைந்துள்ளன. இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. தீயணைப்புத்துறை அதிகாரிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த ராயபுரம் போக்குவரத்து தலைமை காவலர் முருகன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து பிரிவு தலைமைக் காவலர்
உயிரிழந்த காவலர் கவிதா அரக்கோணத்தை சேர்ந்தவர் அவருக்கு 41 வயதாகிறது. 2005ஆம் ஆண்டு பேட்ச் காவலரான இவர் தற்போது முத்தியால்பேட்டை போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த கவிதாவுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். முதல் மகன் அருண்குமார் சேலத்தில் கல்லூரியில் படித்து வருகிறார். மகள் சினேக பிரியா பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மூன்றாவதாக மகன் விஷால் மண்ணடியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்

டிஜிபி ஆய்வு
பாதுகாப்பு பணிக்காக இன்று தலைமைச் செயலகம் வந்த கவிதா, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மரம் மேலே விழுந்து உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்த இடத்திற்கு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் பார்வையிட்டார். ஆபத்தான நிலையில் உள்ள பல மரங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளார். விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்து டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். தீபாவளி கொண்டாடப்பட உள்ள நேரத்தில் மரம் விழுந்து காவலர் உயிரிழந்தது காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து விசாரணை
சற்று நேரம் வரை தங்களுடன் பேசிக்கொண்டிருந்த பெண் காலவர் திடீரென மரம் விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் இதுவரை இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததில்லை என்பதால் காலையில் பணிக்கு வந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மலர் மாலை வைத்து அஞ்சலி
உயிரிழந்த பெண் காவலர் கவிதாவுக்கு குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார். அதோடு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள கவிதாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த கவிதாவிற்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications