தமிழ்நாட்டில் நவ.14 வரை வெளுத்து வாங்கபோகும் மழை.. எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்!
சென்னை: தமிழ்நாட்டில் வரும் 14ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இதனிடையே தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வாங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம்
இலங்கையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவ.9ல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான பின் 48 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் கணிக்கலாம்
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் தமிழ்நாடு, புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்து வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையை ஒட்டியுள்ள அடுத்தகட்டமாக தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயல் சின்னமாகவோ வலுவடைவது பற்றி நாளை மறுநாள்தான் கணிக்க முடியும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த வானிலை நிகழ்வை ஆய்வு மையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

நவ.14 வரை மழை
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரும் 14ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு கனமழைக்கு வாய்ப்பு?
அதேபோல் அடுத்த 4 நாட்களுக்கு, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications