காலை சுட்டெரித்த வெயில்.. மதியம் சென்னையில் திடீர் கனமழை.. உறவினர்களுக்கு போன் போட்டு மகிழும் மக்கள்
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்கிறது. கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டியதால் மக்கள் வெயிலால் அவதிப்பட்டு வந்தனர்.
இன்று காலை கூட கடும் வெப்பம் இருந்து வந்த நிலையில் மதியம் 2 மணிக்கு சட்டென வானிலை மாறியது. சிறிது நேரத்தில் சைதாப்பேட்டை, வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம், முகப்பேர், அண்ணாநகர், அமைந்தகரை, அண்ணாசாலை அரும்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அது போல் சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, சிங்கப்பெருமாள்கோயில், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இடியுடன் பெய்து வரும் மழையால் மக்கள் மனங்கள் மகிழ்ச்சியில் குளிர்ந்தது.
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், குமரி, நெல்லை, நீலகிரி, கோவை திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர் , ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திடீரென இன்று சென்னையில் மழை பெய்ததால் யாரும் முன்னெச்சரிக்க நடவடிக்கையான குடை கொண்டு செல்லுதல், ஜெர்கின் உள்ளிட்டவைகளை அணியாமல் சென்றுவிட்டனர். இதனால் கூட்டம் கூட்டமாக கிடைக்கும் நிழல்களில் நின்றுள்ளனர். இன்னும் சிலர் இந்த மழையை பொருட்படுத்தாமல் நனைந்த படியே செல்கிறார்கள்.
வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் எப்படியும் மழைவிட்டால் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதற்கு பதில் நனைந்தபடியே சென்றுவிடலாம் என்றும் கூறி வருகிறார்கள். சென்னையில் இன்றும் நாளையும் 40, 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில் இந்த மழை மக்களுக்கு ஒரு ஆறுதலை கொடுத்துள்ளது. அது போல் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு அதாவது ஜூன் 9ஆம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications