தொடரும் காற்றழுத்த தாழ்வு நிலை.. இந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்யும்.. சென்னை வானிலை மையம்
Recommended Video
சென்னை: சென்னையில் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடித்து வருவதாகவும் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்து விடுமோ என்று கவலையடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இன்று முதல் படிப்படியாக குறையும் என கூறப்பட்ட நிலையில் இன்று சென்னை மற்றும் தென் சென்னையின் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. அது போல் தமிழகத்தில் அரியலூர், சிவகங்கை, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை மையம்
இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கை மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நிலவுகிறது.

புதுவை
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ மழையும் ராமநாதபுரத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொருத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு வார்னிங்
ராமநாதபுரம், தூத்துகுடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். குமரிக் கடல் பகுதியில் பலத்த சூறைக் காற்றானது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குமரிக் கடல் பகுதிக்கு இன்று செல்ல வேண்டாம்.

13 சதவீதம்
சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரையில் நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்யக் கூடும். வடகிழக்கு பருவமழையை பொருத்தவரையில் கடந்த அக். 1 ஆம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 42 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 36 செ.மீ. இது இயல்பை விட 13 சதவீதம் அதிகம் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications