5 நாட்களுக்கு மிக கனமழை...ராமநாதபுரம், குமரி, நெல்லை, தூத்துக்குடிக்கு ரெட் அலெர்ட்
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நவம்பர் 3ஆம் தேதி வரை தமிழக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர் டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடி மின்னலுடன் அதி கனமழை
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரும். இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், அதி கன மழையும் பெய்யக்கூடும்.
தென்காசி,விருதுநகர்,சிவகங்கை,மதுரை,புதுக்கோட்டை,மயிலாடுதுறை,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம்,கடலூர்,விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மதுரை,சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வெளுத்து வாங்கும் கனமழை
நவம்பர் 1ம் தேதி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, விழுப்புரம் ,காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மற்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம் முழுவதும் மழை
நவம்பர் 2ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Recommended Video

இடி மின்னலுடன் கனமழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சூறாவளிக்காற்று வீசும்
இன்று முதல் 1ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் மற்றும் இன்று முதல் 3ம் தேதி வரை தென்கிழக்கு அரபிக் கடலை ஒட்டிய கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications