நீலகிரியில் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கனமழை நீடிக்கும் - 10 மாவட்டங்களில் கன மழை
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பரவலாக மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் இருந்தும் மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 21 செமீ மழை பெய்து உள்ளது.
இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரியில் கனமழை நீடிக்கும் என்றும், கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
செப்டம்பர் 11 முதல் 15 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications