சென்னையே திணறுது.. தென் மாவட்டங்களில் இருந்து படையெடுக்கும் மக்களால் பெருங்களத்தூரில் கடும் நெரிசல்!
சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் மக்களால் பெருங்களத்தூரில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ஒரே நேரத்தில் அதிகளவு வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கலையொட்டி அளிக்கப்பட்ட 6 நாட்கள் விடுமுறை இன்றுடன் நிறைவடையும் நிலையில், நாளை முதல் பள்ளி, கல்லூரிகள், பொது நிறுவனங்கள் தொடங்குகின்றன. இதையொட்டி, சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் சென்னை நோக்கி திரும்பி வருகின்றனர்.

இதனால், சென்னையின் நுழைவாயிலாக இருக்கும் பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 2 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன. பெருங்களத்தூர் மேம்பாலம், பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நத்தை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து வருகின்றன.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர் விடுமுறை இன்றுடன் முடிவதை ஒட்டி ஏராளமான வாகனங்கள் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிப் படையெடுத்து வருவதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications