"குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்".. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: சமீபகாலமாக சாலைகளில், சிக்னல்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது தொடர்ந்து அதிகரிக்து வருகிறது. இந்நிலையில், சாலைகளில் பிச்சை எடுப்பதற்கு குழந்தைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் சாலை மற்றும் சிக்னல்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வாறு பிச்சை எடுக்கும் பெண்மணியின் தோளில் எப்போதும் அக்குழந்தைகள் தூங்கிக் கொண்டே இருக்கின்றன. ஆபத்துகளை உணராமல் தொடர்ந்து குழந்தையை வைத்துக் கொண்டு சாலைகளில் பிச்சை எடுப்பதைத் தடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

குறிப்பாக, சென்னையில் சாலையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பிரச்சனை தொடர்பாக சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதைத் தடுக்க உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து, சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகரில் சாலை சிக்னல்கள் முன் குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுக்கின்றனர். பிச்சை எடுக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எந்த உருவ ஒற்றுமையும் இல்லை.
பிச்சை எடுக்க பயன்படுத்தும் கைக்குழந்தைகள் எந்நேரமும் துாங்கிக் கொண்டிருக்கின்றன. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வெயில், வாகன சத்தத்துக்கு கூட அந்த குழந்தைகள் கண் விழிப்பது இல்லை. அதனால் குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டு இருக்கிறதா, வேறு மருந்து அல்லது ஆல்கஹால் கொடுக்கப்பட்டு இருக்கிறதா என கண்டறிய வேண்டும்.
பிச்சை எடுக்கும் பெண்கள் பெரும்பாலும் தமிழில் பேசுவதில்லை. குழந்தைகளை வேறு இடங்களில் இருந்து கடத்தி வந்து பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுகின்றனரா, பின்னணியில் செயல்படுவோர் யார் என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக ஆகஸ்ட் 8 இல் அளித்த மனுவை பரிசீலித்து, குழந்தைகளை மீட்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சாலைகளில் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்கள், உண்மையிலேயே அந்த குழந்தைகளின் தாய்கள் தானா என்பதை கண்டறிய மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று கூறினர்.
அப்போது பேசிய நீதிபதி, 21 ஆம் நுாற்றாண்டிலும் இதுபோன்ற நிலை நீடிக்கிறது. இதற்கு சம்பந்தப்பட்ட துறைகள் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும். இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று அரசுக்கும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 11 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications