அம்மா உணவகங்களுக்கு சிக்கல்.. போடப்பட்ட பொதுநல வழக்கு.. சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை: சென்னை அசோக் நகர் மற்றும் கே.கே.நகர் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்கள், மின்வாரிய பெட்டிகள், பொது கழிப்பிடங்களை அகற்றக்கோரிய மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏழை-எளிய மக்கள் பசியால் வாடிவிடக் கூடாது என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு அம்மா உணவகத்தை ஆரம்பித்தார். இங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மிகக் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் முதன் முதலில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்னையில் மட்டும் வார்டுக்கு இரண்டு என மொத்தம் 407 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டிருந்தது. பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த அம்மா உணவகங்கள் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் இயங்கி வருகின்றன.
சென்னையில் அம்மா உணவங்கள், கழிவறைகளை பொறுத்தவரை பல்வேறு அரசு நிலங்களில் தான் அமைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் குளத்தை ஒட்டிய இடங்கள், பூங்காக்கள், நெடுஞ்சாலையோரங்கள், பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள இடங்கள், மக்கள் அன்றாடம் வாகனங்களில் செல்லும் சாலைகள் போன்ற பல்வேறு இடங்களில் அம்மா உணவங்கள் மற்றும் கழிவறைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை கே.கேநகர் மற்றும் அசோக் நகர் பகுதிகளில் உள்ள நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அம்மா உணவங்கள், பொது கழிப்பிடங்கள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இந்த கட்டுமானங்கள் காரணமாக பள்ளி மாணவிகள் பாதசாரிகள் செல்ல வழி ஏதும் இல்லை என்றும் இது குறித்து மாநகராட்சிக்கு புகார் அளித்ததாகவும் இருப்பினும் எந்த நடவடிகையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அமர்வு, மனுதாரர் எழுப்பியுள்ள பிரச்சனை மிக முக்கியமான பிரச்சனை எனக்கூறி மனுவிற்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications