தமிழிசை சௌந்தரராஜனின் சொத்துகள் 2 ஆண்டுகளில் அதிகரித்தது எப்படி? சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு!
சென்னை: மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனின் சொத்துகள் அதிகரித்தது எப்படி? என்பது குறித்து வருமான வரித்துறை, தமிழிசை சௌந்தரராஜன் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூர் தொகுதியைச் சேர்ந்த கௌதம் சிவா என்ற வாக்காளர் பொது நல மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் தெரிவித்த வருமான விவரங்கள் 2024 மக்களவை தேர்தல் மனுவில் உள்ள விவரங்களுடன் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது" என குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களில் முரண்பாடு இருப்பது குறித்து, தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை ஆகியவை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி இருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழிசை சௌந்தரராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, 'இந்த மனு பொதுநல வழக்கோ அல்லது தேர்தல் வழக்கோ அல்ல. வேட்பாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து, தேர்தல் முடிந்த பின்னர் மட்டுமே மனுவாக தாக்கல் செய்ய முடியும்.
வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அவரது கணவர் சௌந்தரராஜன் பெரியசாமி இருவரும் மருத்துவர்கள் என்பதால், ஆண்டு வருமானம் மாறுபடுவது இயல்பானது. எனவே, இதில் முரண்பாடு இல்லை என்று கூற முடியாது. ஏற்கனவே, எந்தவித குற்றச்சாட்டும் இன்றி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. தற்போது, தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், விளம்பர நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சமர்ப்பித்த வருமானம் மற்றும் 2026 சட்டசபை தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் வருமானத்தில் மாற்றம் உள்ளது. அதனால், வருமான வரித்துறை விசாரணை நடத்தினால் தான் உண்மைகள் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியதுடன், வருமான வரித்துறை பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications