அதென்ன புதுசா? தவறாக சம்பளம் நிர்ணயம்.. சென்னை ஆவடி பட்டாலியன் கான்ஸ்டபிள் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
சென்னை: ஒரு போலீஸ்காரருக்கு, தவறுதலாக சம்பளம் நிர்ணயம் செய்துவிட்டு, அதற்கு பிறகு, அந்த சம்பளத்தை பிடித்தம் செய்துவிட்டனர்.. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் கோர்ட்டுக்கே சென்றுவிட்டார். அந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது.
சென்னை ஆவடி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் எஸ்.ராஜா.. இவருக்கு 6வது சம்பள குழுவின் அடிப்படையில் 2009 முதல் 2012வரை ரூ.11,653 சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2012 ஜூலை மாதம் சம்பளம் நிறுத்தப்பட்டுவிட்டது.

சம்பளம்: இதுகுறித்து எஸ்.ராஜா கேட்டதற்கு, தவறாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதனால் இதுவரை கூடுதலாக வழங்கப்பட்ட ரூ.56,363 சம்பளத்தை படிப்படியாக பிடித்தம் செய்ய போவதாகவும், பூந்தமல்லி 13வது பட்டாலியன் கமாண்டென்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் அதிர்ந்துபோன ராஜா, இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், மனுதாரரின் சம்பளம் எப்படி தவறாக நிர்ணயம் செய்யப்பட்டது? என்று அரசு தரப்பு விளக்கம் தர வேண்டும் என்று கேட்டது.. அத்துடன், சம்பள பிடித்தம் செய்யும் உத்தரவை பிறப்பித்த 13வது பட்டாலியன் காமாண்டென்ட் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
உத்தரவு: அதன்படி, இந்த வழக்கு நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.. 13வது பட்டாலியன் காமாண்டென்ட் அய்யாசாமி நேரில் ஆஜரானார். அப்போது வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், இந்த வழக்கை மனுதாரர் திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதிபதி, மனுதாரர் வழக்கை திரும்ப பெறுவதாக சொன்னதிலிருந்தே அவர் மிரட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவருக்கு பிரச்சனை ஏற்பட்டால் நீதிமன்றம் அவர்கள் மீது தாமாக முன்வந்து வழக்கு தொடரும். என்று எச்சரித்தார்.
நீதிமன்றம்: தொடர்ந்து தன்னுடைய உத்தரவில் நீதிபதி, 13வது பட்டாலியன் காமாண்டென்ட் அய்யாசாமியிடம், சம்மந்தப்பட்ட அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போன்று வேறு யாருக்காவது பிரச்னை இருந்தால் உடனடியாக கண்டறிந்து தீர்க்க வேண்டும். நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சூழல் ஏற்பட்டதால் தான் அனுப்பப்பட்டது என்று தெரிவித்து வழக்கை திரும்ப பெற அனுமதியளிக்கிறேன்" என்று கூறி உத்தரவிட்டார்.
தவறுதலாக சம்பளம் நிர்ணயம் செய்துவிட்டு, பிறகு சம்பளத்தில் பிடித்தம் செய்தது தொடர்பாக நீதிமன்றம் தந்துள்ள இந்த உத்தரவு அனைவரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications