ஹைதராபாத் டூ சென்னை.. வெறும் 2 மணி நேரம்தான்! அதிசயத்தை நிகழ்த்தப்போகும் இந்தியன் ரயில்வே!
சென்னை: அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டத்தை போல, ஹைதராபாத் டூ சென்னைக்கு அதிவேக ரயில் சேவையை கொடுக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டு வருகிறது.
இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. பணிகள் முடிவுற்றால் விமான பயணத்திற்கு இணையாக இந்த ரயில் பயணம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஹைதராபாத்-சென்னை இடையே 705 கி.மீ தொலைவுக்கு தண்டவாளம் அமைத்து அதில் அதிவேக ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த திட்டத்திற்கு இறுதி இட ஆய்வை மேற்கொள்வதற்கான டெண்டர், அரசு பொறியியல் ஆலோசனை நிறுவனமான RITES லிமிடெட்-க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்து கொடுக்கும். இதன் அடிப்படையில் திட்டம் தொடங்கப்படும். திட்டத்தின் ஆய்வு பணிகளுக்கு ரூ.33 கோடி வரை தேவைப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இது குறித்து தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் டைம்ஸ் நவ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "இந்த திட்டத்திற்கான ஆய்வு பணிகளுக்கு ரூ.33 கோடி வரை செலவாகும். வந்தே பாரத் ரயில், சரக்கு ரயில், பயணிகள் ரயில் பாதைகளை விட இந்த அதிவேக ரயிலின் பாதை வித்தியாசமானதாக இருக்கும். இதில் முழுக்க முழுக்க அதிவேக ரயில்கள் மட்டுமே இயக்கப்படும். மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பாதை போன்று இது இருக்கும்" என்று கூறியுள்ளார்.
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் 2028ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மொத்தம் ரூ.1.65 லட்சம் கோடி வரை செலவாகும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஹைதராபாத்-சென்னை விரைவு ரயில் தடத்தை ஒப்பிடுகையில் இந்த திட்டம் முடிவடைய 15 ஆண்டுகள் வரை ஆகும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.
ரயில்கள் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் ஓடுவதற்கு ஏற்றார்போல இந்த தடம் உருவாக்கப்படும். இருப்பினும் 320 கி.மீ வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும். அதேபோல இந்த ரயில்பாதை விமான போக்குவரத்தை விட விரைவானதாக இருக்கும் என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத் டூ சென்னைக்கு விமானங்கள் 1.15 மணி நேரத்தில் வந்து சேர்கின்றன. ஆனால், விமான நிலையத்தில் செக்யூரிட்டி கிளியரன்ஸை முடித்து வெளியே வருவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. எனவே மொத்த பயண நேரம் 2-3 மணி நேரமாக இருக்கிறது.
ஆனால் இந்த விரைவு ரயிலில் நீங்கள் வெறும் 2 மணி நேரத்தில் வந்து சேர்ந்துவிடலாம். மற்ற ரயில்களுடன் ஒப்பிடும்போது 10 மணி நேர பயண நேரம் மிச்சமாகிறது. எனவே இந்த ரயில் சேவை குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால் டிக்கெட் விலைகள் குறைவாக இருந்தால் எல்லா தரப்பு மக்களும் இதை பயன்படுத்துவார்கள்.












Click it and Unblock the Notifications