கோவை குனியமுத்தூரில் மசூதி கட்ட அனுமதியளித்த உத்தரவு.. ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி வழக்கு
சென்னை: இஸ்லாமியர்கள் இல்லாத கோவை குனியமுத்தூர் பகுதியில் மசூதி கட்ட அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்ய கோரி இந்து முன்னணி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது.
கோவை மாவட்டம், குனியமுத்தூரில் சுண்டக்காமுத்தூர் செல்லும் சாலையில் கிரேஷ் அறக்கட்டளை என்ற அமைப்பு மஸ்ஜித் இ ஹிரா என்ற மசூதியை கட்டி வருகிறது. எந்தவித அனுமதி பெறாமல் இந்த மசூதி கட்டப்பட்டு வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர், காவல் துறைக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்து முன்னணி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எந்த வித நடவடிக்கையும் இல்லாததால், மசூதி சட்டவிரோதமாக கட்டப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கோவை மாவட்ட நிர்வாகம், மசூதி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே மசூதி அப்பகுதியில் செயல்பட அனுமதியளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டுள்ளார்.
மசூதி கட்ட அனுமதியளித்த கோவை மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி இந்து முன்னணி நிர்வாகி பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், இஸ்லாமியர்கள் இல்லாத கோவை குனியமுத்தூர் பகுதியில் மசூதி கட்ட அனுமதிப்பது பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் மாலா, அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications