வந்து நிரம்பும் விநாயகர் சிலைகள்.. தமிழகம் முழுக்க 1.25 லட்சம் இடங்களில் பூஜை! இந்து முன்னணி திட்டம்
சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த இந்து முன்னணி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன.

விநாயகர் சிலை வழிபாடு
குறிப்பாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களில் விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரமாக நடக்கிறது. மேலும் கடைகளில் விநாயகர் சிலை விற்பனைக்கு வந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த உள்ள நிலையில் இந்து அமைப்பினர் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1.25 லட்சம் இடங்களில்...
அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டு இந்து முன்னணி அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு மாவட்ட இந்து முன்னணி அமைப்பினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் அனுமதி
போலீசாரிடம் முன் அனுமதி பெற்று சிலைகளை அமைப்பதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர். அரசு மற்றும் போலீசார் வகுத்துள்ள விதிகளை பின்பற்ற விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்
சென்னை மாநகர போலீசாரின் அனுமதியுடன் விநாயகர் சிலை வழிபாடு நடத்த சென்னை மாநகர நிர்வாகிகள் முயன்று வருகின்றனர். இதுதொடர்பாக இந்து முன்னணியினர் சார்பில் சிந்தாதிரிபேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலை வழிபாட்டின்போது பிரிவினைவாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்கிற கோஷத்தை இந்து முன்னணி அமைப்பினர் முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.

விமரிசையாக கொண்டாட முடிவு
இதுதொடர்பாக இந்து முன்னியின் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், துணைத்தலைவர் கார்த்திகேயன், செயலாளர் மனோகரன் ஆகியோர் கூறியதாவது: ‛‛இந்து முன்னணி சார்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை வெகுவிமரிசையாக கொண்டாட முடிவு செய்துள்ளோம். 1 லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய உள்ளோம்'' என்றார். இதேபோல் பிற இந்து அமைப்பினரும் விநாயகர் சிலை வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications