தாய் மதம் திரும்புங்க-இந்துத்துவவாதியாக உருமாறிய சீமான்-அர்ஜூன்சம்பத் மகிழ்ச்சி-தேசிய லீக் போராட்டம்
சென்னை: தமிழர்கள் சமயம் சைவம்.. கிறிஸ்தவமும் இஸ்லாமியமும் வெளிநாட்டு மதங்கள்.. நாம் இந்துக்கள் அல்ல. இந்து என்பதில் இருந்து விடுபட்டு அனைவரும் தாய் மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. சீமான் தமது பேச்சுக்கு ஒரு வாரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ஜெ. ரஹீம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்போது பேசிய சீமான், நாங்கள் தமிழர்கள். எங்கள் சமயம் வேறு. எங்கள் வழிபாட்டு முறை வேறு. எங்கள் தெய்வங்கள் வேறு. எங்கள் சமயமே வேறு. இதில் உறுதியாக இருக்கிறேன்.
என்னுடைய சமயம், மெய்யியல் கோட்பாடு என அனைத்தையும் சேர்த்துதான் மீட்டெடுப்பேன். இதில் நாங்கள் சைவர்கள். சிவன், முருகனை வழிபடுகிறவர்கள். என்னுடைய மகனை வடபழனி முருகன் கோவிலுக்கு கூட்டிச் சென்ற போது என்ன கோத்திரம் என கேட்டனர். நான் சிவகோத்திரம் என்றேன். ஏனெனில் நாங்கள் சிவசமயம். எங்கப்பாவின் சொத்து பத்திரத்தில் சிவகோத்திரம் என்றுதான் எழுதி உள்ளது. வாங்க எங்க வீட்டில் காட்டுகிறேன்.

சைவம், மாலியம்
இன்றைக்கு அஸ் பர் இந்து லா என்கிறீர்கள். அன்றைக்கு சிவசமயம் என்றுதான் எழுதி இருக்கிறது. எங்கள் சமயம் சிவனை வழிபடுவதால் சிவசமயம். முருகனை வழிபடுவதால் சைவம். மாயோனை வழிபடுவதால் கண்ணனை வழிபடுவதால் வைணவம். வைணவம் என்பதை தூய தமிழில் மாலியம் என்கிறோம். வில்லியம் ஜோன்ஸ் போட்ட கையெழுத்தில் பவுத்தன், சீக்கியன், சைவன், பார்சி என நாங்க எல்லாரும் இந்துவாக கருதப்படுகிறோம். சரித்திரப்படி நாங்கள் இந்து அல்ல. வெள்ளைக்காரன்போட்ட சட்டப்படி இந்து. அதனை நான் ஏற்கலை எதிர்க்கிறேன். நாங்க தான் இந்துவே அல்ல என்கிறார். அப்போது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழர் சமயமே இல்லையே.. ஒன்று ஐரோப்பிய மதம்.. இன்னொன்று அரேபிய மதம். என்னுடைய சமயம் சைவம். என்னுடைய சமயம் மாலியம். என்னுடைய சமயம் சிவசமயம். திரும்பி வா.. மரச்செக்கு எண்ணெய்க்கு திரும்பியதைப் போல சீனியைவிட்டுட்டு கருப்பட்டிக்கு வருகிற மாதிரி திருப்பி வா என்றார்.

சீமானுக்கு எதிர்ப்பு
சீமானின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுவரை கிறிஸ்தவம், இஸ்லாம் மதத்தை வழிகாட்டி என்றும் அனைவரும் தமிழர் என்றுதான் சீமான் கூறி வந்தார். இப்போது வெளிப்படையாக தமிழர் மதம் சைவம், வைணவம்; கிறிஸ்தவமும் இஸ்லாமும் வெளிநாட்டு மதங்கள் என பேசுகிறார். தமிழ் மொழியையும், இந்து மதத்தையும் இணைத்து எச்.ராஜா சில நாட்களுக்கு முன் பேசி சர்ச்சையானது. தற்போது சீமான் அதே குரலில் பேசுகிறார். தமிழ் மொழி தொன்மை வாய்ந்தது. பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் சைவம், வைணவம் என இந்து மதம் பிரிந்திருந்தது. ஆதி தமிழர்கள் சமயம் சார்ந்து இயங்கவில்லை. சீமான் உளறல் இந்துத்துவாவினர் திராவிடத்திற்கு எதிரான அரசியலாக, தமிழர்கள் அனைவரும் இந்துக்கள் என திசைதிருப்புவதற்கு உதவும் வகையில் உள்ளது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

சீமான் ஒரு கிறிஸ்தவர்
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், சீமானின் பேச்சு மகிழ்ச்சியளிக்கிறது. அன்று திராவிடர் கழக மேடைகளில் முருகன், சிவன், பார்வதியை கடுமையாக விமர்சித்தவர் சீமான். இன்று கொள்கையளவில் மாறி முருகனை முப்பாட்டன் என்கிறார். சிவனை பெரும்பாட்டன் என்கிறார். கண்ணனை கேவலமாக பேசிய சீமான், இன்று கிருஷ்ணனை மாயோன் என்கிறார். அவரது இந்த கொள்கை மாற்றத்தை வரவேற்கிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

அர்ஜூன் சம்பத் வரவேற்பு
சீமானின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப. உதயகுமார், கத்தோலிக்க பிரிவை சேர்ந்தவர் சீமான். இவரது தந்தையின் பெயர் செபாஸ்டியன். இவரது பெயர் சைமன். இவரின் வீட்டு முற்றத்திலேயே லூர்து மாதா சிலை உள்ளது. நான் நேரடியாக சென்று பார்த்திருக்கிறேன். இவர் யாரை மகிழ்விப்பதற்காக இப்படி பேசுகிறார் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சீமானுக்கு கெடு- போராட்ட எச்சரிக்கை
இந்திய தேசிய லீக் கட்சியின் தடா ஜெ. ரஹீம் தமது ட்விட்டர் பக்கத்தில், சீமான் அவர்கள் ஒரு வாரத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் சென்னையில் உள்ள சீமான் வீட்டை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications