6 மாதத்தில் 25,000 பேருக்கு எச்ஐவி பாதிப்பு.. விழிப்புணர்வு இல்லாதது தான் காரணமா? என்ஜிஓ சொல்வதென்ன?
சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தமிழகத்தில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 98 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் 25,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் எச்ஐவி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு இல்லாததும், என்ஜிஓக்கள், தன்னார்வலர்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததும் தான் காரணம் என்கிறார் அமைதி அறக்கட்டளையின் தலைவர் ரூபா பாலன்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதில் பேசிய தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் ஒரு லட்சத்தி 57 ஆயிரத்து 98 நபர்கள் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

குறிப்பாக," தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 25 ஆயிரம் பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு இருப்பதாக கூறியிருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இளைஞர்கள் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே எச்ஐவி தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென ஆறு மாதத்தில் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு எச்ஐவி தொற்று உறுதியாக என்ன காரணம் என்பது குறித்து ஒன் இந்தியா தமிழ் தன்னார்வ தொண்டு நிறுவனமான அமைதி அறக்கட்டளையின் ரூபா பாலன் இடம் பேசினோம். இவர் மத்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் சொன்ன தகவல் அதிர்ச்சி தரும் ரகமாக இருந்தது. காரணம் சமீப காலங்களில் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்துவதே இல்லை என்ற தகவலை கூறினார். அதாவது," கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பள்ளி கல்லூரி அளவில், லாரி ஓட்டுனர்கள் இடையேயும் விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.

நிறைய தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் தாங்களாகவே முன்வந்து எச்ஐவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இது தொடர்பாக தமிழக அரசும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியமும் போதிய அளவிலான நிதியை ஒதுக்கவில்லை. மேலும் இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தவில்லை. தற்போது நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. புதிதாக நோய் தொற்றாளர்களை கண்டறிவது மற்றும் நோய் பரவாமல் தடுப்பது ஆகியவற்றிற்காக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. நிறைய தொண்டு நிறுவனங்கள் தற்போது எச்ஐவி ஒழிப்பு பணியில் இருந்து விலகி விட்டன அல்லது விலக்கப்பட்டுள்ளனர். முழுக்க முழுக்க அரசின் கவனமின்மையே இதற்கு காரணம்" என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அது மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை லாரி ஓட்டுனர்களிடையே எச்ஐவி பாதிப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் லாரி ஓட்டுனர் தொழிலில் ஈடுபட்டவர்கள் இடையே எச்ஐவி பாதிப்பு இருந்த நிலையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இளைஞர்களிடையே போதை பொருள் பழக்கமும், டாட்டூ போடும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. ஒரே ஊசியை கொண்டு பலர் போதை மருந்துகளை ஏற்றுவதால் ஒருவரிலிருந்து மற்றவருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்படுகிறது.
இதேபோல ஒரு முறை பயன்படுத்திய ஊசியை வைத்து பலருக்கு டாட்டூ போடுவதால் எச்ஐவி பாதிப்பு பரவுகிறது. மேற்கு கேரளாவில் கூட இந்த ஆண்டு ஒரேபகுதியில் திடீரென அதிக அளவில் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டது. விசாரித்த போது அவர்கள் போதை ஊசி பழக்கம் கொண்டவர்கள் என்றும், ஒரே ஊசியில் பலருக்கு போதை மருந்து ஏற்றியதால் எச்ஐவி பாதிப்பு பரவி வந்ததும் கண்டறியப்பட்டு இருக்கிறது. எனவே நோய் பரவாமல் தடுப்பது அவசியம். குறிப்பாக இளைஞர்கள் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே எச்ஐவி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்ஐவி ஒழிப்புப் பணியில் அரசு மற்றும் எதுவும் செய்து விட முடியாது. என்ஜிஓக்கள், தன்னார்வலர்களை இதற்கு பயன்படுத்த வேண்டும். அதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம்" என்கிறார்.
( எச்ஐவி பாதிப்பு தொடர்பாக தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், மருத்துவர்கள், நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒன் இந்தியா தமிழ் பேசியது. அந்த கட்டுரைகள் அடுத்தடுத்து வெளியாகும் )












Click it and Unblock the Notifications