ஓசூர் விமான நிலையம்.. அமைச்சர் டிஆர்பி ராஜா பேச்சால் நொந்து போன செல்லூர் ராஜூ.. கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: ஓசூர் விமான நிலைய பணிகள் என்னாச்சு?. பூமி பூஜை கூட நடக்கவில்லையே? என்று கேள்வி எழுப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அதிரடி பதில் கொடுத்தார். தெர்மாகோல் விடுவது போல, விமானத்தை பறக்க விட்டு விட முடியாது, விமான நிலையம் அமைப்பது சுலபமல்ல என்று பதில் தந்தார். அந்த பதிலால் நொந்துபோன செல்லூர் ராஜூ அதற்கு ரியாக்சனும் தந்தார்.
சட்டசபையில் நேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடந்தது. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அமைச்சர்களிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பினார். செல்லூர் ராஜூ பேசுகையில், ராமேசுவரத்தில் இன்னும் ஓராண்டில் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும்?. தி.மு.க. ஆட்சி முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் ஏர்போர்ட் எப்படி அமைப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அதற்கு பதில் அளிக்கையில், கோவைக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?, நாங்கள்தான் கோவை விமான நிலைய விரிவாக்க பணியை தொடங்கி உள்ளோம். நிலம் கையப்படுத்தி உள்ளோம் என்றார். தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும் போது, செல்லூர் ராஜூக்கு மதுரைக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா?, ராமநாதபுரத்திற்கு வேண்டாமா?. அவர்கள் மேல் உங்களுக்கு ஏன் பொறாமை?. இதென்ன ஜீபூம்பா வேலையா, மாந்திரீக வேலையா? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு பதில் அளிக்கையில், நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று பேசக்கூடாது. தவறான தகவலை தெரிவிக்க வேண்டாம் என்றார். கோவை விமான நிலைய பணிக்காக நிலங்கள் ஒதுக்கி கொடுத்தது தாங்கள் தான் என்றும், 500 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுத்தோம் என்றும், ஆய்வு பணிகளை முடுக்கிவிட்டோம் என்றும் அதேபோல், தூத்துக்குடி, மதுரையில் நிலங்கள் கையகப்படுத்தி கொடுத்தோம் என்றும் கூறினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் இடங்கள் கையகப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக விரிவான விளக்கத்தை தர இருக்கிறேன் என்றார். அப்போது குறுக்கிட்ட செல்லூர் ராஜூ, ஓசூர் விமான நிலைய பணிகள் என்னாச்சு?. பூமி பூஜை கூட நடக்கவில்லையே? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தெர்மாகோல் விடுவது போல, விமானத்தை பறக்க விட்டு விட முடியாது, விமான நிலையம் அமைப்பது சுலபமல்ல, நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்றார்.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் இந்த பதிலால் வருத்தம் அடைந்த செல்லூர் ராஜூ, விமான நிலையம் கேட்டால் தெர்மாகோல் என்று ஓட்டுகிறீர்கள். சரி பரவாயில்லை, உங்களை போல், எங்களுக்கும் அதிகாரி சொன்னதை தான் செய்தோம், தெர்மாகோல் என கிண்டல் அடிக்கிறீர்கள், ராஜாவுக்கு நன்றி என்று கூறி அமர்ந்தார்.












Click it and Unblock the Notifications