ஒசூர் ’விடியல்’ விடுதி குளியலறையில் கேமரா.. பார்த்ததும் பதறிப் போன பெண்கள்! அன்புமணிக்கு வந்த கோபம்!
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டாட்டா தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் விடுதியின் குளியல் அறைகளில் ரகசிய கேமராக்கள் இருந்ததாக கூறப்படும் சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஓசூர் விடுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பெண்களின் கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஓசூர் அருகே ராயக்கோட்டை வன்னியபுரத்தில் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஐபோன் உதிரிபாகங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு லாளிக்கல் என்ற இடத்தில் அடுக்குமாடி விடுதி உள்ளது.
இந்த நிலையில் அங்குள்ள விடுதி குளியல் அறைகளின் ரகசிய கேமராக்கள் இருப்பதை பெண் தொழிலாளர்கள் பார்த்து புகார் அளித்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இளம்பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்தது தெரியவந்தது.

ஓசூர் டாடா ஆலை
இதைத் தொடர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் விசாரணை நடத்திய போலீசார் குளியலறைகளை கேமரா வைத்ததாக வட மாநிலத்தைச் சேர்ந்த நீலா குமாரி என்ற பெண்ணை அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் வீடியோக்களை எடுத்த நீலா குமாரி அதனை தனது ஆண் நண்பருக்கு பகிர்ந்தது தெரிய வந்தது. மேலும் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது நிலா குமாரியை போலீசார் கைது செய்திருக்கும் நிலையில், அவரது ஆண் நண்பர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குளியறையில் ரகசிய கேமரா
இந்நிலையில், ஓசூர் விடுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பெண்களின் கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள வன்னியபுரத்தில் செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கியியுள்ளனர்.
பெண்கள் விடுதி புகார்
அங்குள்ள விடியல் விடுதியின் எட்டாம் பிளாக்கில் உள்ள குளியல் அறைகளில் ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதில் பதிவான காட்சிகள் வெளியாள்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி அங்கு பணியாற்றும் பெண்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விடுதியில் தங்கியுள்ள பெண்களின் தனியுரிமையை பாதுகாக்க அரசு தவறியது கண்டிக்கத்தக்கது.
விடியல் விடுதி
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் தங்குவதற்காக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து 20 ஆயிரம் பேர் தங்கும் வகையில் விடியல் விடுதியை கட்டிக் கொடுத்துள்ளன. அரசின் கட்டுப்பாட்டில் தான் இந்த விடுதி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அதனால் இந்த விடுதி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு தங்கியுள்ளனர். ஆனால், அவர்களின் தனியுரிமை, கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடைபெற்றிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அன்புமணி ராமதாஸ் கருத்து
பெண் தொழிலாளர் விடுதியின் குளியலறையில் காமிராக்களை பொருத்தியதால ஒரு பெண் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறார்களா? என்பதைக் கண்டறிந்து அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பெண் தொழிலாளர்கள் தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தால், அவற்றை முடக்க வேண்டும். விடியல் விடுதியில் தங்கியுள்ள பெண் தொழிலாளர்களின் தனியுரிமையை உறுதி செய்வதுடன், அவர்கள் கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் எந்த தீங்கும் ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications