அனல் மின்நிலையத்தில் கொள்ளை போகாமலேயே 2.34 லட்சம் டன் நிலக்கரி மாயம்- அதிமுக ஆட்சியின் மெகா ஊழல்!
சென்னை: அதிமுக ஆட்சியில் வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொள்ளையடிக்கப்படாமலேயே 2.34 லட்சம் டன் நிலக்கரி மாயமான விவகாரம் விஸ்வரூபமெடுத்து கொண்டிருக்கிறது. இந்த ஊழல் விவகாரத்தில் மாஜி அதிமுக அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி மற்றும் அதிகாரிகள் மீது எந்த நேரத்திலும் நடவடிக்கை பாயக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
Recommended Video
பொதுவாக அரசு துறைகளில் ஊழல்கள் என்பது ஒரு பொருளை சந்தை மதிப்பை விட பல மடங்கு கூடுதலாக விலைக்கு வாங்கி அரசாங்க பணத்தை கொள்ளையடிப்பது என்பதாக நடைபெறும். அல்லது அரசுக்கு சொந்தமான பொருட்களை தங்களது நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டு போலி கணக்குகள் மூலம் அரசு பணத்தை சூறையாடுவது என்பதும் இன்னொரு வகை ஊழல்.
ஆனால் இப்படியான சோ கால்ட் ஊழல் வழிமுறைகள் எதுவும் இல்லாமலேயே கொள்ளையடிக்க முடியும்; பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ய முடியும் என்பதைத்தான் தமிழகத்தில் பல லட்சம் டன் நிலக்கரி மாயம் என்கிற ஊழல் வெளிப்படுத்துகிறது. மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை, அதன் அடிப்படையில் அறப்போர் இயக்கம் மற்றும் ஊடகங்கள் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த நிலக்கரி மாயமான விவகாரத்தைப் பார்ப்போம்.

டெண்டர் திருத்தம்
தமிழக அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி அதானி நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களிடம் இருந்துதான் பெறப்படுகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டர்களில் பங்கேற்க நிறுவனங்களின் டர்ன் ஓவர் என்பது ரூ1,000 கோடியாக இருக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்ட்டது. இதன் மூலம் எதிர்பார்த்தபடியே சில நிறுவனங்கள்தான் இந்த டெண்டர்களைப் பெற்றன. இந்த தனியார் நிறுவனங்கள் நிலக்கரியை பெரும்பாலும் இந்தோனேசியாவில் உள்ள சுரங்க நிறுவனங்களிடம் இருந்துதான் பெறுகின்றன.

பினாமி கம்பெனிகள்
இந்தோனேசியாவிலேயே தமிழகத்தைச் சேர்ந்த சில பெருந்தலைகள் பினாமி கம்பெனிகளை உருவாக்கி அவற்றிடம் இருந்து டெண்டர் எடுத்த நிறுவனங்கள் நிலக்கரியை வாங்கும்படி நிர்பந்திக்கப்பட்டது என்பதில் தொடங்குகிறது இந்த ஊழல். பொதுவாக இந்தியாவில் அனல்மின் நிலையங்களுக்காக வாங்கப்படும் நிலக்கரியின் விலை தரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. நிலக்கரியின் தரம் என்பது என்ன? ஈரப்பதம் குறைவானதாக, அதிக அளவில் எரிசக்தி கொண்டதாக இருக்க வேண்டும். அதாவது நிலக்கரியின் தரமானது எரிசக்தி திறனைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. இது கலோரிஃபிக் தரம் என அழைக்கப்படுகிறது.

நிலக்கரி தரத்தில் ஊழல்
தமிழகத்தில் 6,000 கலோரிஃபிக் மதிப்பு கொண்ட தரமான நிலக்கரியை தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழக மின்சார வாரியம் வாங்கியது 4,500 கலோரிஃபிக் மதிப்பிலான தரமற்ற நிலக்கரி. இதனை உறுதி செய்தது மத்திய சுங்கத்துறைதான். தரமான நிலக்கரிக்கான சந்தை மதிப்பை விலையாக போட்டு தரமற்ற நிலக்கரியை வாங்கி பல்லாயிரம் கோடி லாபம் பார்த்திருக்கின்றனர் ஊழல் தலைகள். இது ஒருவகையான ஊழல். அடுத்ததாக வட சென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமான விவகாரத்தை பற்றி இனி பார்ப்போம்.

ரூ85 கோடி நிலக்கரி மாயம்
அதிமுக ஆட்சிக் காலத்திலேயே 2.38 லட்சம் டன் நிலக்கரி (ரூ85 கோடி மதிப்பு) மாயமானது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது. சட்டசபை தேர்தல் காலத்தில் இந்த குழு ஆக்டிவ்வாக செயல்படவில்லை. தற்போது திமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமான விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆனால் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியோ, எங்கள் அதிமுக ஆட்சிக் காலத்திலேயே இதை கண்டுபிடித்துவிட்டோம். நாங்கள்தானே விசாரணை நடத்த குழுவையே அமைத்தோம் என்கிறார். ஆக வட சென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம் என்பது மட்டும் திட்டவட்டமான உண்மை. இதனை அதிமுக ஆட்சிக் கால அமைச்சரான தங்கமணியும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

2.34 லட்சம் டன் நிலக்கரி மாயமான கதை
இத்தனை லட்சம் டன் நிலக்கரியை கொள்ளையடித்து கொண்டு போனார்களா? கடற்கொள்ளையர்கள் போல டன் கணக்கில் நிலக்கரியை எப்படி கொள்ளையடித்துவிட்டுப் போயிருக்க முடியும்? என்பது சாமானியர்களின் கேள்வி. இதற்கும் நாம் முன்னர் சொன்ன நிலக்கரி தரத்துக்குமான தொடர்பை படித்தால் பல லட்சம் டன் நிலக்கரி மாயத்தின் பின்னணி புரியும். தரமற்ற நிலக்கரி அதாவது 4,500 கலோரிஃபிக் திறன் மட்டுமே கொண்ட நிலக்கரியை எரிப்பதன் மூலம் குறைவான எரிசக்திதான் கிடைக்கும். ஆனால் ஒப்பந்தங்களில் 6,000 கலோரிஃபிக் தரமான நிலக்கரி வாங்கியதாக பதிவு செய்திருக்கிறார்கள். 4,500 கலோரிஃபிக் தரத்திலான நிலக்கரியை எரிப்பதன் மூலம், 6,000 கலோரிஃபிக் தரமான நிலக்கரிக்கு கிடைக்கும் எரிசக்தியை பெற முடியாது அல்லவா?. 4,500 கலோரிஃபிக் நிலக்கரியை மேலும் மேலும் கூடுதலாக எரிப்பதன் மூலமே 6,000 கலோரிஃபிக் தரத்திலான நிலக்கரியை எரித்தால் என்ன எரிசக்தி கிடைக்குமோ அதனைப் பெற முடியும். அதனால் நமது மின்நிலையங்களில் நிலக்கரியை இருப்பில் இருந்து எடுக்கும் போது ஒரு அளவை பதிவேடுகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த பதிவு செய்த குறிப்பிட்ட அளவுக்கு அதிகமான நிலக்கரியை பயன்படுத்தி 6,000 கலோரிஃபிக் தரத்திலான எரிசக்தியை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த தகிடுத்தனத்தால்தான் அதாவது தரமற்ற நிலக்கரியை கொள்முதல் செய்து அதனை மூடி மறைக்க கூடுதல் நிலக்கரியை எரித்து போர்ஜரி செய்ததன் மூலமாகத்தான் 2.38 லட்சம் டன் நிலக்கரி ஒரே ஒரு அனல்மின் நிலையத்தில் மட்டும் மாயமாகி இருக்கிறது என்கின்றன மின்வாரிய வட்டாரங்கள். தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களிலும் ஆய்வு செய்தால் இன்னும் எத்தனை லட்சம் டன் நிலக்கரி மாயமானதோ தெரியாது என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள். இந்த நுட்பமான ஊழல் உறுதி செய்யப்படும் போது மாஜி அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி மட்டுமல்ல பல அதிகாரிகளும் சிக்குவார்கள் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications