ஓசூர் மக்களே ஹேப்பியா.. ஏர்போர்ட்டிலிருந்து சர்ருன்னு பெங்களூர் பறக்கலாம்.. வருகிறது ரிங் ரோடு
சென்னை: பெங்களூரில் அதிகரிக்கும் டிராபிக்கை குறைக்கும் வகையில் மத்திய அரசு சாட்டிலைட் ரிங்ரோட்டை அமைத்து வருகிறது. இந்த சாலை தமிழ்நாட்டில் ஓசூரையும் இணைப்பதால், பொதுமக்கள் இனி ரொம்பவே ஈஸியாக பெங்களூருக்கு செல்லலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வாகன நெரிசல் காரணமாக டிராபிக் நெரிசல் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. நாட்டில் இருக்கும் பல முக்கிய நகரங்களிலும் கூட டிராபிக் நெரிசல் தான் முக்கிய பிரச்சினையாக உள்ளது.
அதிலும் நமது அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூர் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இந்தியாவிலேயே டிராபிக் பிரச்சனை அதிகமாக இருக்கும் நகரங்களில் ஒன்றாக பெங்களூர் இருக்கிறது.

பெங்களூர்
அங்கு வேலை நேரங்களில் வீடுகளை விட்டுக் கிளம்பினால் டிராபிக்கிலேயே அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய சூழல் ஏற்படும். இதைத் தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் டிராபிக்கை குறைக்க கூகுள் உடன் கூட அவர்கள் ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். இதற்கிடையே நகரில் ஏற்படும் டிராபிக்கை குறைக்கவும் புறநகர் மற்றும் இதர பகுதிகளை நகருடன் இணைக்கும் வகையிலும் புதிய சாட்டிலைட் ரிங் ரோடு திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இது இப்போது உள்ள புனித் ராஜ்குமார் ரிங் ரோட்டிற்கும் வெளியே அமைய உள்ளது.

சாட்டிலைட் ரிங் ரோடு
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். கர்நாடக வந்த அமைச்சர் நிதின் கட்கரி, இந்த ரிங் ரோடு பணிகளைப் பார்வையிட்டார். அதன் பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதைக் குறைக்க நாங்கள் சேட்டிலைட் டவுன் ரிங் ரோட்டை அமைத்து வருகிறோம். நகரின் நெரிசலைக் குறைக்கும் வகையில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்த சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு அமைக்கப்படுகிறது" என்றார். ₹17,000 கோடி கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த சாட்டிலைட் ரிங் ரோடு மொத்தம் 288 கிலோமீட்டர்கள் நீளமுடையது.

கர்நாடகா- தமிழ்நாடு
இந்த 288 கிலோமீட்டரில் கர்நாடகாவில் 243 கிலோமீட்டரும் தமிழ்நாட்டில் 45 கிலோமீட்டரும் அமைய உள்ளது. இந்த 288 கிமீ தூரத்தில் ஏற்கனவே 136 கிமீ தூரத்திற்கு ரூ. 5,731 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதில் ஏற்கனவே 53 கிமீ பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார். சரக்கு போக்குவரத்து வேகத்தை அதிகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இந்த ரிங் ரோட் 100 கிமீ வேகத்தில் வாகனங்கள் செல்லும்படி வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும், அடுத்து வரும் ஆண்டுகளில் அதிகரிக்கப் போகும் டிராபிக்கை கருத்தில் கொண்டே இந்த சாலைப் பணிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

ஓசூருக்கு ஜாக்பாட்
இந்த சாட்டிலைட் ரிங் ரோடால் கர்நாடக மட்டுமின்றி, தமிழ்நாடும் கூட பயனடையும். ஏனென்றால் இந்த சாலையில் 45 கிமீ சாலைகள் தமிழகப் பகுதிகளில் இடம் பெற உள்ளது. குறிப்பாக எல்லையில் அமைந்துள்ள ஓசூர். இதில் பெரியளவில் பயணம் பெறும். ஓசூரில் விரைவில் அமையவுள்ள விமான நிலை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூருக்கான ரிங் ரோட்டில் ஒசூரும் இணைக்கப்படுவது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஓசூருக்கு விமானம் மூலம் வருபவர்கள் ரொம்பவே ஈஸியாக இந்த சாட்டிலைட் ரிங் ரோட்டை பயன்படுத்தி பெங்களூருக்கு செல்ல முடியும்.

பக்கா திட்டம்
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த சாட்டிலைட் ரிங் ரோடு ஒசக்கோட்டை, தேவனஹள்ளி, தொட்டபல்லாபுரா, ராம்நகர், கனகபுரா, ஆனேக்கல் பகுதிகளையும் தமிழ்நாட்டில் இருந்து ஓசூரையும் இணைத்து அமைக்கப்படுகிறது. இதில் ஒசக்கோட்டை என்பது பெங்களூர் கிழக்கு புறநகர் பகுதி, தேவனஹள்ளி, தொட்டபல்லாபுரா ஆகியவை பெங்களூரின் வடக்கு புறநகர் பகுதிகள். ராம்நகர், கனகபுரா ஆகியவை பெங்களூரின் மேற்கு பகுதியிலுள்ள நகரங்கள் (இவை புறநகர்கள் அல்ல). மேலும், ஆனேக்கல் பெங்களூரின் தென் மேற்கு பகுதியிலுள்ள நகரம். ஓசூர், பெங்களூரின் தெற்கேயுள்ள நகரம். ஆக மொத்தம், பெங்களூருக்கு அருகே இல்லாமல் சற்று தொலைவிலுள்ள சிறு நகரங்களை இணைக்கிறது இந்த சாட்டிலைட் ரிங் ரோடு.

சாட்டிலைட் நகரங்கள்
பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு, பெங்களூரு நகருக்குள் நுழையாமல் கனரக வாகனங்கள் பாதுகாப்பாகச் செல்ல வழிவகை செய்யும். அதே நேரத்தில் போக்குவரத்திற்கான செலவையும் இது கணிசமாக குறைக்கும். எல்லாவற்றையும் தாண்டி பெங்களூரில் மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெங்களூரில் டிராபிக் அதிகரித்து வரும் நிலையில், நிலைமை சமாளிக்க இந்த சாட்டிலைட் ரிங் ரோடு அருகே உள்ள ஊர்களில் கர்நாடக அரசு சாட்டிலைட் நகரங்களைக் கூட அமைக்கலாம் என்றார் நிதின் கட்கரி.

சென்னை-பெங்களூரு சாலை
இது மட்டுமின்றி தமிழகத்திற்குப் பயன் தரும் மற்றொரு முக்கிய திட்டம் குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். தென்னிந்தியாவில் இரு முக்கிய நகரங்களாகச் சென்னையும் பெங்களூரும் உள்ளது. இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே சாலை போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.17 ஆயிரம் கோடி செலவில் அமையும் இந்த 285.3 கிலோமீட்டர் சாலை, இரு நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும். தென்னிந்தியாவின் இரு முக்கிய நகரங்களை இணைக்கும் இந்தத் திட்டம் மார்ச் 2024க்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications