பீகாரில் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு விதை போட்ட மண்டல் கமிஷன்! ஜாதி ஓட்டுக்களை உடைத்து பாஜக வென்ற பின்னணி
சென்னை: வி.பி. சிங் தலைமையிலான அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதிலிருந்து, இன்றுவரை பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் அனைத்தும் ஜாதி அடிப்படையிலான சமூக மற்றும் அரசியல் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட ஒரு நீண்ட மாற்றங்கள் ஆகும்.
மண்டல் கமிஷன் பரிந்துரை எப்படி இந்த மாற்றங்களுக்கு வித்திட்டது, அதன் விளைவாக ஆர்.ஜே.டி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை எவ்வாறு வளர்ந்தன, இறுதியாக பா.ஜ.க எப்படி எழுச்சி பெற்றது, யார் ஜெயித்தாலும் ஏன் நிதீஷ்குமார் சிஎம் ஆகிறார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பீகார் இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்று, போதிய கல்வி கற்கும் வாய்ப்பு, தொழில்நுட்ப புரட்சி, உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் அதிகரிப்பு போன்றவை நிகழவில்லை. வற்றாத கங்கை நதி ஓடியும் வறுமையில் இருக்கிறது. பீகாரை பொறுத்த வரை சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி 1990களுடன் மீளவே இல்லை.. ஜெகன்நாத் மிஸ்ரா தான் காங்கிரஸ் கட்சியின் கடைசி முதல்வராக இருந்தார்.

விபி சிங் செய்த வேலை
1990களில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி. சிங் அரசு அமல்படுத்தியது. அந்த சம்பவம், மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதாவது ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்தது. இதற்கு உயர்ஜாதியினர் என்று சொல்லப்படும் முன்னேறிய வகுப்பினர் மத்தியில் அப்போது கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர்கள் காங்கிரஸை உதறிவிட்டு பாஜகவுக்கு ஆதரவாக அணி திரண்டனர். ஏனெனில் பாஜக முன்னேறிய வகுப்பினருக்கான கட்சியாக பார்க்கப்பட்டது.
அதன்பிறகு 1990 ஆம் ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆதரவால், ஜனதா தளம் எழுச்சி பெற்று வெற்றி பெற்றது. அதன்பின்னர் பீகாரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை. அதாவது, முன்னேறிய வகுப்பினரும் காங்கிரசை கைவிட்டனர், பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் மாநில அளவிலான கட்சிகளுக்கு ஆதரவளித்து காங்கிரசை கைவிட்டனர்.
வட இந்தியாவின் அரசியல் பாதையை மாற்றியமைத்த முக்கியத் திருப்புமுனை என்றால், மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கம் தான்.
வட மாநிலங்களில் ஜாதி அரசியல்
ஒரு பக்கம் உயர் ஜாதியினரும். இன்னொரு பக்கம் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்று திரண்டர். இப்படியாக வடமாநிலங்களில் சமூக அணி திட்டல் அதிரடியாக அரங்கேறத் தொடங்கியது. அப்படியே காங்கிரஸ் வீழ்ச்சி அடைய தொடங்கியது. மறுபக்கம் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் அதிகம் அடங்கிய கட்சிகள் பெரிய அளவில் வளர்ந்தன.இதுதான் பீகார், உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அரசியல் ரீதியான மாற்றங்களுக்கு காரணம் ஆனது. சமாஜ்வாதி வளர்ந்ததும், பகுஜன் சமாஜ் வளர்ந்ததும் இப்படித்தான்.
மண்டல் கமிஷன் பரிந்துரை தான் காரணம்
இதன் காரணமாக 1990களில் வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய "பிராமணர் - தலித் - முஸ்லிம்" கூட்டணி பலவீனமடைந்து, புதிய ஜாதி அடிப்படையிலான கூட்டணிகள் உருவாகிவிட்டன. மண்டல் கமிஷன் அமலாக்கத்தின் காரணமாக உடனடி அரசியல் பலனைப் பெற்ற கட்சிகள் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் அதன் பிளவுக்குப் பின் உருவான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவைதான்.
லல்லு பிரசாத் யாதவ் வளர்ச்சி
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் , மண்டல் கமிஷன் பரிந்துரைக்கு பின்னர், பீகாரில் மிகப் பெரும்பான்மையாக இருந்த யாதவர் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து, லல்லு பிரசாத் யாதவ் தலைமையில் ஆர்.ஜே.டி பலம் பெற்றது. ஒபிசியினர் அணியாக லல்லு இதனை அப்போது திரட்டி வெற்றி கண்டார்.
நிதீஷ்குமார் ஜெயித்தது எப்படி
இதையடுத்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ் குமார், பீகாரில் லல்லுவின் ஆட்சிக்கு பின்னர் யாதவர்களின் ஆதிக்கத்தால் ஓரங்கட்டப்பட்ட மற்ற அதிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் மற்றும் மகா தலித்துகளையும் நிதீஷ் குமார் தன்னுடன் இணைத்துக்கொண்டு, ஆர்.ஜே.டி-க்கு ஒரு வலுவான மாற்றாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை பீகாரில் உருவாக்கினார். எனவே ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என இரண்டு கட்சிகளின் வளர்ச்சியும், மண்டல் கமிஷன் பரிந்துரைக்கு பிறகான அரசியலால் மாற்றங்களால் உருவானது. இரண்டும் ஓபிசி ஜாதிகளின் பிளவுகளையும் ஒருங்கிணைப்புகளையும் காட்டின.
பாஜக எப்படி வளர்ந்தது
அதேநேரம் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜக்கிய ஜனதா தளம்ஆகிய கட்சிகள் புறக்கணித்ததாகக் கருதப்பட்ட மிகவும் பின்தங்கிய துணை ஜாதிகள் மற்றும் யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமூகம் ஆகியோரை பா.ஜ.க நேரடியாகக் குறிவைத்து ஆதரித்தது. இது அந்த கட்சிக்கு நல்ல பலன் கொடுத்தது. இதன் பலனாக பாஜகவும் நன்கு வளர்ந்தது. ஒரு கட்டத்தில் நிதீஷ்குமாருடன் கூட்டணி வைத்து ஆட்சியிலும் பங்கேற்றது.
இந்து என்ற அடையாளம்
இதனிடையே "லப்தார்த்தி வர்க்கம்" என்ற ஒரு புதிய அடையாளத்தை பா.ஜ.க உருவாக்கியது. இது ஜாதி பார்க்காமல், அரசின் நலத்திட்டங்களை நேரடியாகப் பெறும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய திட்டத்தை உருவாக்கியது. இறுதியாக இந்து என்ற குடையின் கீழ் அனைத்து சமூக மக்களுக்கும் திட்டங்களை உருவாக்கியது. இது அந்த கட்சி வளர காரணமாக அமைந்தது. பாஜகவை பொறுத்தவரை காங்கிரஸ் செய்த எந்த தவறையும் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது. 2014க்கு பிறகு பீகாரில் அசுர வளர்ச்சி அடைந்தது. நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தையும் விட பாஜக ஒரு படி மேலே தான் அங்கு வளர்ந்து நிற்கிறது.
யார் இந்த நிதீஷ் குமார்
ஆனால் என்ன தான் கூட்டணி ஆட்சி என்றாலும், முதல்வர் என்ற இலக்கை அடைய முடியாமல் தடுப்பது நிதீஷ்குமார் தான். நிதீஷ் குமாரை பொறுத்தவரை ஜாதி அடையாளத்துடன் கூடிய ஆள் கிடையாது. அனைத்து ஜாதியினராலும் பீகாரில் நன்கு மதிக்கப்படும் நபர். அவர் தான் பல்வேறு சமூகங்களை ஒருங்கிணைத்து அவர்களுக்காக நின்றார். எனவே அவரை பல ஜாதி மக்கள் கொண்டாடுகிறார்கள். பீகாரில் அவரை தவிர்த்துவிட்டு அரசியல் என்ற ஒன்றை யாருமே செய்ய முடியாத அளவிற்கு சக்தியாக இருக்கிறார்.
எனவே தான் அவரை பாஜக பயன்படுத்தியது. அதன் மூலம் பாஜகவும் வளர்ந்தது. பீகாரில் நிதீஷ்குமாரை பொறுத்தவரை பல்டி அடிப்பதில் மன்னன் என்ற பெயரும் உண்டு. அவர் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க மாட்டார்.. தனக்கு கசப்பு ஏற்பட்டால் லல்லுவுடன் சேர்ந்துவிடுவார். இல்லாவிட்டால் பாஜக உடன் சேருவார். இப்படி மாறி மாறி பல்டி அடித்துள்ளார்.
நிதீஷ்குமார் முதல்வராவது ஏன்
என்னதான் அவர் அதிகாரத்திற்காக அவர் பல்டி அடித்தாலும், அவரை தவிர்த்துவிட்டு பீகாரில் ஒரு அரசியல் என்பது இப்போது வரை சாத்தியமே இல்லாமல் இருக்கிறது. ஏனெனில் பீகாரில் அவரை ஒரு சாதி அடையாளமாக பார்க்கவில்லை. பல சாதி மக்கள் அவரை இன்றும் ஹீரோவாக பார்க்கிறார்கள். இதனால் தான் இந்த முறையும் அவர் முதல்வராக போகிறார். 19 ஆண்டுகள் சிஎம்ஆக இருக்கிறார். யாரு படம் ஓடினாலும் ஹீரோ என்பது நிதீஷ் குமார் தான்.












Click it and Unblock the Notifications