Sudharsanam Murder Case:"கடலில் தேடிய ஊசி"! பவாரியா கொலையாளிகளை பிடித்தது எப்படி? ஜாங்கிட் விளக்கம்
சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேரும் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அந்த கொள்ளையர்களை பிடித்தது எப்படி என்பது குறித்து ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் விவரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது போலீஸ் பணியில் இது ஒரு சவாலான வழக்கு. சுதர்சனம் கொலை வழக்கில் தமிழகத்தில் உள்ள எல்லா குற்றவாளிகளின் சரித்திர பதிவேடுகளை புரட்டிய போது எந்த துப்பும் கிடைக்கவில்லை. அது போல் சுதர்சனம் வீட்டில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் தமிழக குற்றவாளிகளுடன் ஒத்து போகவில்லை.
இதனால் இந்த குற்றத்தை வட மாநிலத்தவர்கள் செய்திருக்கலாம் என்று கருதி, வட மாநிலத்தில் உள்ள கொள்ளை கும்பலின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்தோம். அப்போதுதான் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிறையில் இருந்த ஒரு கைதியின் கைரேகையோடு பொருந்தியது.
கொலையாளிகளை தேடினோம்
இதையடுத்து நாங்கள் வடமாநிலங்களுக்குச் சென்று தங்கி கொலையாளிகளை தேடினோம். அப்போது இன்டர்நெட், போன், சிசிடிவி, நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகள் ஏதும் கிடையாது. கடலில் இறங்கி ஊசியை தேடுவது போல் அங்குள்ள காடுகள், மலைகள், உள்ளிட்ட இடங்களில் தேடினோம்.
கைரேகை
அப்போதுதான் இந்த கைரேகை எங்களுக்கு கை கொடுத்தது. எங்கள் விசாரணையும் சூடுபிடிக்கத் தொடங்கியது. கடந்த 20 ஆண்டுகளாக தமிழக போலீஸார் அந்த ஆதாரங்களை வைத்து சிறப்பாக வாதாடி இந்த தீர்ப்பை பெற்றுத் தந்தனர். பொதுவாக வழக்குகளை பொருத்தமட்டில் நமக்கு குற்றவாளி யாரென்பது தெரியும். ஆனால் அதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு காவல் துறை திறம்பட தகவல்களை அளித்து வாதிட வேண்டும். இந்த தீர்ப்பால் நாங்கள் பெருமையடைகிறோம் என்றார்.
பவாரியா
தமிழகத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை வடமாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்திருந்தது. இவர்கள் மிகவும் கொடூரமாக தாக்கி கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
கும்மிடிப்பூண்டி
அந்த வகையில் கடந்த 2005ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த சுதர்சனத்தின் வீட்டு கதவை யாரோ தட்டினர். உடனே மாடியில் இருந்த சுதர்சனம் கீழே இறங்கிய போது முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்களை பார்த்து சப்தமிட்டார்.
62 பவுன் நகைகள்
இதையடுத்து பவாரியா கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அவரது வீட்டில் இருந்த 62 பவுன் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
சுட்டு பிடிக்க உத்தரவிட்ட ஜெயலலிதா
இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, கொள்ளையர்களை சுட்டு பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து அப்போது ஐஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து கொள்ளையர்கள் தேடப்பட்டனர்.
9 பவாரியா கொள்ளையர்கள்
அந்த வகையில் ராஜஸ்தான், ஹரியானாவை சேர்ந்த 9 பவாரியா கொள்ளையர்களை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வந்தனர். கைதான 9 பேரில் 3 பேர் ஜாமீனில் வெளியாகி தலைமறைவாகிவிட்டனர். 2 பேர் சிறையிலேயே உயிரிழந்துவிட்டனர்.
20 ஆண்டுகளுக்கு பிறகு நீதி
தற்போது சிறையில் உள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக், ஜாமீன் பெற்ற ஜெயில்தார் சிங் ஆகிய 4 பேர் வழக்கை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து பவாரியா கும்பலைச் சேர்ந்த ஜெகதீஷ், அசோக், ராகேஷ் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் 24 ஆம் தேதி வெளியாகிறது.












Click it and Unblock the Notifications