"பேச கூட யாருமில்ல".. ஹாஸ்பிட்டலில் செய்தியை கேட்ட ஓபிஎஸ்.. இன்று மாலையே வருகிறார்? அப்போ எடப்பாடி?
சென்னை: அதிமுக அலுவலகத்திற்கு போடப்பட்ட சீல் சரியாக 10 நாட்கள் கழித்து அகற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு என்ன செய்யும்? இதற்கு எதிராக எப்போது மேல்முறையீடு செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக அலுவலகம் முன் கடந்த ஜூலை 11ம் தேதி கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் இந்த அலுவலகத்தின் சாவியை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

தீர்ப்பு
இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. அந்த அலுவலக சாவிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதிமுக அலுவலகத்திற்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு சாவி கொடுக்கப்பட்டாலும், அவர் 1 மாதத்திற்கு தொண்டர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது, என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னடைவு
இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வத்தை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் கட்சி அலுவலகத்திற்கு போர் நடத்துவது போல வந்துவிட்டு அதற்கு உரிமை கோர முடியாது. அதற்கு பெயர் கட்டிட ஆக்கிரமிப்பு. ஒருவர் ஆட்களுடன் வந்து உள்ளே நுழைந்து உரிமை கோருவது சரியல்ல என்று ஓ பன்னீர்செல்வத்தின் செயலை உயர் நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது.

தீர்ப்பு
இந்த தீர்ப்பு தகவல் ஓ பன்னீர்செல்வத்திற்கு போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஓ பன்னீர்செல்வம் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருக்கிறார். 4 நாட்களாக அங்குதான் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் யாரையும் சந்திக்க முடியவில்லை. மருத்துவமனையில் இருந்துதான் இந்த செய்தியை போன் மூலம் தனது வழக்கறிஞர் மூலம் ஓ பன்னீர்செல்வம் தெரிந்துகொண்டார்.

கஷ்டம்
இதனால் அவர் பேச கூட தற்போது பக்கத்தில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. அவர் முழுமையாக குணமடைந்த நிலையில் இன்று மாலை வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை அவர் வீட்டிற்கு சென்றாலும், அவர் யாரையும் சந்திக்க மாட்டார். இன்றும், நாளையும் அவர் தனிமைப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. அவர் மீட்டிங் எதையும் நடத்த வாய்ப்புகள் இல்லை.

அப்போ எடப்பாடி
இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக அலுவலகம் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. அவரின் மேனேஜர்தான் அலுவலக சாவியை வாங்கினார். எடப்பாடி பழனிசாமிக்கு சாவி கொடுக்கப்பட்டாலும், அவர் 1 மாதத்திற்கு தொண்டர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது, என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் எடப்பாடி அதிமுக அலுவலகம் செல்வதை தவிர்த்தார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications