நெஞ்சு குளிர்ந்துவிடும்! பல்லக்கு தடையை நேக்காக கையாண்ட திமுக.. ஆதீனத்திற்கு அனுமதி கிடைத்தது எப்படி?
சென்னை; பட்டிணப் பிரவேசத்தில் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான காரணம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியருக்கு பல்லக்கு தூக்கும் விழாவிற்கு கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை பல இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆதினத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
வரும் 22ம் தேதி பட்டிணப் பிரவேசம் நடைபெற இருந்த நிலையில், இதற்கு தடை விதிக்கப்பட்டது பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பை சந்தித்தது.

தடை
என்ன நடந்தாலும் இந்த பல்லக்கு நிகழ்வை நடத்தியே காட்டுவோம் என்று பாஜக சவால்விட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை, நானே பல்லக்கை தூக்குவேன் என்று கூறினார். பாஜக மூத்த உறுப்பினர் எச். ராஜாவோ.. என்ன நடந்தாலும் நான் அந்த நிகழ்வில் கலந்து கொள்வேன் என்று கூறினார். அதேபோல் பல்வேறு இந்துத்துவா அமைப்புகளும் இதை கடுமையாக எதிர்த்து இருந்தன.

அரசு நேரடியாக
ஆனால் அரசு இந்த நிகழ்விற்கு எதிராக நேரடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தடை விதித்தது எல்லாம் கோட்டாச்சியர் பாலாஜி மட்டுமே. அவரை தவிர அரசு தரப்பில் யாரும் நேரடியாக இந்த விவகாரத்தில் பேசவில்லை. முதல்வர் ஸ்டாலினிடம் இதை பற்றி பேசுவேன். விரைவில் நல்ல முடிவு எடுப்போம். எல்லோரும் ஏற்றுக்கொள்ள கூடிய நல்ல முடிவு எடுப்போம் என்று அமைச்சர் சேகர் பாபுவும் குறிப்பிட்டு இருந்தார்.

ஆதீனங்கள் ஒன்று கூடினர்
இந்த தடைக்கு ஆதீனங்கள் பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு ஆளுநர் ரவி மயிலாடுதுறைக்கு பயணம் மேற்கொண்டதும். அவர் தருமபுரம் ஆதீனத்தை பார்த்ததாலும் அரசு கோபத்தில் இருப்பதாகவும். இதனால்தான் இந்த நிகழ்விற்கு தடை என்று மதுரை ஆதீனம் புகார் வைத்துள்ளார். தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது. அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கூறியுள்ளார்.

அழுத்தம்
என்ன ஆனாலும் இந்த நிகழ்வு நடந்தே தீரும். இந்து நிகழ்வு, பாரம்பரியம் ஒன்றை தடை செய்ய இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. இதை யாராலும் தடுக்க முடியாது. இந்த பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கூடாது. முதல்வரே இந்த நிகழ்ச்சியை நேரில் நடத்த வேண்டும் என்று மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் தெரிவித்துள்ளார். இன்னும் பல ஆதீனங்கள் இதில் கடுமையான கருத்துக்களை தெரிவித்தனர்.

நல்ல பெயர் போய்விடும்
இந்த நிலையில்தான் தேவையின்றி இந்த விவகாரத்தை நாம் தடை செய்ய வேண்டாம் என்று அரசு முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 2020ல் இந்த நிகழ்வு நடக்கவில்லை. அப்போது அரசு நேரடியாக தடை விதிக்கவில்லை. மாறாக விசிக, திக போராட்டத்தால் ஆதீனமே தாமாக முன் வந்து.. நான் நடந்து போகிறேன் என்று கூறினார். அதனால் அப்போது அரசுக்கு எதுவும் சிக்கல் இல்லை. ஆனால் இப்போது கோட்டாச்சியார் தடை விதிப்பது அரசுக்கு எதிரான விஷயமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

சேகர்பாபு விருப்பம்
கோவில் கும்பாபிஷேகம், பூஜை, புனரமைப்பு என்று ஆளும் திமுக அரசு இந்து வழிப்பாட்டாளர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளது. இப்போது போய் இந்த நிகழ்வை தடை செய்வது சரியாக இருக்காது என்று திமுகவிலேயே சிலர் கருதி இருக்கிறார்களாம். அடுத்தடுத்து தேர் விபத்துகள் நடந்தது போன்ற கெட்ட சகுனங்கள் நடந்த நிலையில், இப்போது போய் இந்த பல்லக்கு நிகழ்வை தடை செய்வது சரியாக இருக்காது என்று இந்து சமய அறநிலையத்துறையும் சென்டிமென்ட்டாக கருதி இருக்கிறதாம்.

சிக்னல் கொடுத்தார்
விரைவில் அனைவரின் மனம் குளிரும்படி நல்ல முடிவு எடுக்கப்படும். தருமபுர ஆதீன பட்டின பிரவேசம் குறித்து சுமுகமான முடிவு எட்டப்படும்.மே 22 ஆம் தேதிதான் பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடைபெறும் என்பதால் அதற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கிறார். இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே நிதானமாக பேசி, சேகர் பாபு மிகவும் நேக்காக கையாண்டார். அவர் சிக்னல் கொடுத்தபடியே தற்போது நல்ல முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆளும் தரப்பிற்கு இருந்த அழுத்தம் குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications