உடம்பில் கீறல் இருக்கே.. பள்ளி மாணவி இறந்து 3 நாள் விசாரிக்காதது ஏன்.. வேல்முருகன் காட்டம்..!
வேல்முருகன் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்
சென்னை: "ஒரு பெண் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து இருக்கிறார் என்றால், அவரது உடம்பில் எப்படி கீறல் இருக்கும்? மாவட்ட நிர்வாகம் நேற்று வரை இதுதொடர்பாக விசாரணை செய்யவில்லை? " கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில், வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சின்னசேலம் மாணவி உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

144 உத்தரவு
சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனிடையே மாணவியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்துள்ளது.. நேற்றைய கலவரத்தையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது... இந்நிலையில், மாணவியின் உயிரிழப்பு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது..

வேல்முருகன்
மாநில அரசுக்கு கண்டனத்தை வலுவாக தெரிவித்து வருகிறது.. இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன், மாணவி இறப்புக்கு காரணமாக யார் இருந்தாலும், சட்டத்திற்கு முன் அவர்களை நிறுத்தி கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.. இது தொடர்பாக வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது:

உடம்பில் கீறல்
"ஒரு பெண் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து இருக்கிறார் என்றால், அவரது உடம்பில் எப்படி கீறல் இருக்கும்? மாவட்ட நிர்வாகம் நேற்று வரை இதுதொடர்பாக விசாரணை செய்யவில்லை? மாணவர்களை முன்கூட்டியே பள்ளிக்கு வர வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம் என்ன? அமைச்சர்கள், டிஜிபி உள்ளிட்டோர் ஆய்வு செய்ததை வரவேற்கிறேன்.. ஆனால் மூன்று நாட்களாக விசாரிக்காமல் இருந்ததற்கு அதிகாரிகளின் மெத்தன போக்கு காரணமா? அரசு அதிகாரிகள் ஒரு சில பேர் அந்த பள்ளி நிர்வாகத்திற்கு உடந்தையாக இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

இரும்புக்கரம்
இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதல்வரை நேரடியாகவே சந்திக்க இருக்கிறேன்.. மேலும், இறந்த பெண்ணிற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அந்த பெண்ணின் அம்மாவுக்கு தமிழக அரசு வேலை அளிக்க வேண்டும்.. பாலியல் குற்றசாட்டிற்கு உள்ளாகும் தனியார் பள்ளிகளை விரைந்து அரசுடமையாக்க வேண்டும். இதுபோன்ற பள்ளி நிர்வாகத்தை அரசுஇரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வேல்முருகன் காட்டமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications