லாட்டரி அதிபர் மார்டின் குடும்பமே ஹேப்பி.. ஒரே குடும்பத்தில் மூன்று எம்எல்ஏக்கள் வென்றது எப்படி?
சென்னை: பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ். ஐ.ஜே.கே. கட்சியில் இருந்தார். அவர் சமீபத்தில்தான் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அவரை திருச்சி மாவட்டம் லால்குடியில் அ.தி.மு.க. சார்பில் களம் இறங்கினார். இதில் அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். இவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா, சென்னை வில்லிவாக்கத்தில் த.வெ.க. வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இதேபோல் லீமா ரோசின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், லட்சிய ஜனநாயக கட்சியைத் தொடங்கினார். அத்துடன் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக காமராஜர் நகரில் போட்டியிட்டார். அவரும் வெற்றி பெற்றுள்ளார். இப்படி லாட்டரி அதிபர் மார்டின் குடும்பத்தில் 3 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி உள்ளனர்.
அரசியல் கொள்கைகளைத் தாண்டி, அதிகாரத்தின் மையப்புள்ளியில் எப்போதும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு கட்சிகளில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ள நிகழ்வு தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. இதனைச் சுட்டிக்காட்டி பிரவீன் விஜயகுமார் என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

எதிர்காலத்தில் வர்த்தக ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ ஏதேனும் நெருக்கடிகள் ஏற்பட்டால், அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் பாதுகாப்பையும் உதவியையும் பெறுவதற்காகவே மார்ட்டின் குடும்பத்தினர் இவ்வாறு பிரிந்து நின்று போட்டியிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். "எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கென்று ஒரு ஆள் இருப்பார்" என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நகர்வு அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
திருச்சி லால்குடியில் லீமா ரோஸ்: லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியான இவர், சமீபத்தில்தான் அ.தி.மு.க-வில் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி இவருக்கு வாய்ப்பளிக்க, லால்குடி தொகுதியில் போட்டியிட்டு அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாகத் தேர்வாகியுள்ளார்.
புதுச்சேரியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்: மார்ட்டினின் மகனான இவர், சொந்தமாக 'லட்சிய ஜனநாயக கட்சி'யைத் தொடங்கினாலும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
சென்னையில் ஆதவ் அர்ஜுனா: மார்ட்டினின் மருமகனான இவர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஜனநாயகம் கேலிக்கூத்தா? இந்தத் தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டிப் பதிவிட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தி, "ஜனநாயகமே, நீ என்னைக் கேலி செய்கிறாயா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்ட அ.தி.மு.க, த.வெ.க மற்றும் பா.ஜ.க கூட்டணி என அனைத்துப் பக்கங்களிலும் ஒரே குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவது, ஜனநாயகத்தின் உண்மையான நோக்கத்தைச் சிதைப்பதாக பிரவீன் தனது பதிவில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications