வெளிநாட்டு வேலை.. சைபர் அடிமைகளாக மாற்றப்படுவது எப்படி.. தமிழக சைபர் கிரைம் டிஜிபி விளக்கம்
சென்னை: இந்தியாவில் இருந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் டேட்டா என்ட்ரி மற்றும் கால்சென்டர்கள் போன்ற வேலைகளுக்கு அங்கீகரிக்கப்படாத மனிதவள ஏஜென்சிகளால் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. அந்த நாட்டு சைபர் மோசடி பேர்வழிகள், இவர்களை இந்தியாவில் சைபர் குற்றங்களை நடத்தப் பயன்படுத்துகிறார்கள் என தமிழக சைபர் குற்ற கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக சைபர் குற்ற கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கோ அல்லது தங்களின் நாட்டிற்கோ வரவழைத்து, அவர்களை 'சைபர் கிரைம்' உள்ளிட்ட குற்றச் செயல்களில் சிலர் ஈடுபடுத்துகின்றனர். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் 'சைபர் அடிமைகள்' என்று வகைப்படுத்தப்படுகிறார்கள். இப்படி, தற்போது சைபர் அடிமைத்தனம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் இருந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் டேட்டா என்ட்ரி மற்றும் கால்சென்டர்கள் போன்ற வேலைகளுக்கு அங்கீகரிக்கப்படாத மனிதவள ஏஜென்சிகளால் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. அந்த நாட்டு சைபர் மோசடி பேர்வழிகள், இவர்களை இந்தியாவில் சைபர் குற்றங்களை நடத்தப் பயன்படுத்துகிறார்கள்.
அதாவது, அவர்களே போன் செய்து பேசி இந்தியாவில் சைபர் மோசடி செய்வதைவிட இந்தியர்களின் குரல் மூலம் இந்த மோசடிகளைச் செய்வது மிகவும் எளிதாகிறது என மோசடிக்காரர்கள் நம்புகின்றனர். இது மாதிரியான அங்கீகரிக்கப்படாத ஆட்சேர்ப்பு ஏஜென்சிகளுக்கு எதிராக பல புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்படாத ஆட்சேர்ப்பு முகவர்களுடன் தொடர்புடைய பல சமூக ஊடக இணைப்புகள், இணையதளங்களை அரசு முடக்கி வருகிறது.
எனவே, இது போன்ற மோசடிகளில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம். விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், இது போன்ற மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலை சந்தித்திருந்தால், சைபர் குற்றப் பிரிவின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து அதில் புகார் தெரிவிக்கலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்" இவ்வாறு கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மித்தல் அறிவிப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications