ஸ்டாலின் அரசின் முதல் பட்ஜெட்.. செப் 21 வரை எந்த நாளில் என்ன மானிய கோரிக்கை.. முழு விவரம்
சென்னை : ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில்
நடத்தப்பட உள்ளதாகவும், வருகின்ற ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வரை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

எம்எல்ஏக்கள் பங்கேற்பு
இந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் பாமக சார்பில் ஜி. கே.மணி,வி.சி.க.சார்பில் சிந்தனைச் செல்வன்,பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன்,
காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமச்சந்திரன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி ஆகியோர் பங்கேற்றனர்.

காகிதம் இல்லா பட்ஜெட்
பின்னர் செய்தியாளரிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, சென்னை கலைவாணர் அரங்கத்தில், 13-ஆம் தேதி நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார், தமிழகத்தில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படுகிறது என தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கணினி வசதி, டேப்லெட் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

மானிய கோரிக்கை
வேளாண்மைத் துறைக்கு என்று தனியாக நிதி நிலை அறிக்கை வருகின்ற 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. வருகின்ற ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வரை மானிய கோரிக்கை விவாதம், அமைச்சர்கள் பதில் தருவார்கள் என தெரிவித்தார். பட்ஜெட் குறித்து மானிய கோரிக்கை விவாதங்கள் என்னென்ன நாட்களில் எந்த கோரிக்கை நடக்க உள்ளது என்பதை பார்ப்போம்.

ஊரக வளர்ச்சி
ஆகஸ்ட் 23ம் தேதி நீர்வளத் துறை, ஆகஸ்ட் 24ம் தேதி நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஆகஸ்ட் 25ம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆகஸ்ட் 26ம் தேதி, கூட்டுறவு உணவு மற்றும் பாதுகாப்பு துறை, ஆகஸ்ட் 27ம் தேதி அன்று உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை, 28ம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் (பொதுப்பணித்துறை) , ஆகிய மானிய கோரிக்கைகள் நடைபெறும்.

தொழில்துறை
29ம் தேதி அரசு விடுமுறை, 30ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுறை, 31ம் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ( கால்நடை, மீன்வளம், பால் வளம்), செப்டம்பர் 1ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறை , செப்டம்பர் 2ம் தேதி தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை, செப்டம்பர் 3ம் தேதி வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, சிறுகுறு மற்றும் நடுத்தர வளர்ச்சி துறை ஆகிய துறைகள் மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். இதேபோல் செப்டம்பர் 21 வரை பல்வேறு துறைகள் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications