ஐடி மொத்தமா அள்ளிட்டு போயிடும்? உங்கள் வீட்டில் எவ்வளவு தங்கம் இருக்கலாம்? தெளிவான விளக்கம் இதோ!
சென்னை: தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை எப்படியாவது வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் பெரும்பாலான இல்லத்தரசிகளின் கனவாக இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு வீட்டில் எவ்வளவு தங்கம் இருக்கலாம்? திருமணமான, திருமணமாகாத பெண்களுக்கான தங்க உச்சவரம்பு இருப்பு எவ்வளவு? வீட்டில் இருக்கும் தங்கத்துக்கு ரசீது தேவையா? என பல கேள்விகள் எழுந்திருக்கிறது. அதற்கான பதிலை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..
இந்திய கலாசாரத்தில் தங்கம் ஒரு செல்வ செழிப்பின் அடையாளம் மட்டுமல்ல. அது ஒரு மரபு, ஒரு பாதுகாப்பு, ஒரு உணர்வு எனக் கூறலாம். திருமணம் உள்ளிட்ட நல்ல காரியங்களில் பெண்களின் கழுத்தில் பொட்டி தங்கமாவது இருக்க வேண்டுமென அனைவருமே கருதுவார்கள்..
ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் தங்க நகைகள் ஒரு அங்கம் போலவே காணப்படுகிறது. திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், தீபாவளி, கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்வுகளில் தங்க நகைகள் பரிசாக வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

தங்கம் வரம்பு
அதேசமயம், பலர் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகவும் கருதுகின்றனர். வங்கியில் பணம் சேமிப்பதை விட தங்கத்தை வீட்டில் வைத்திருப்பது நிம்மதியளிப்பதாகப் பல குடும்பங்கள் நம்புகின்றன. இந்நிலையில், "வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?" என்ற கேள்வி பலரிடமும் அடிக்கடி எழுகிறது. குறிப்பாக வருமான வரித்துறை சோதனை செய்தால், தங்கம் பறிமுதல் செய்யப்படுமா என்ற பயம் சிலரிடத்தில் நிலவுகிறது. இதற்கான விளக்கத்தை வருமான வரித்துறை தெளிவாக வழங்கியுள்ளது. இந்தியாவில் ஒரு நபர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்ற வகையில் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு எதுவும் இல்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமானவரி துறை
அதாவது ஒருவர் தங்கத்தை வாங்கியதாகவோ, பரிசாக பெற்றதாகவோ, அல்லது பரம்பரை வழியாக பெற்றதாகவோ அதன் மூலத்தை சரியான ஆவணங்களுடன் நிரூபிக்க முடிந்தால், அவர் எவ்வளவு தங்கம் வைத்திருந்தாலும் அது குற்றமாகாது. ஆனால் இதற்கான முக்கிய நிபந்தனை ஒன்று உள்ளது. தங்கத்தின் மூல ஆதாரம் தெளிவாக ஆவணங்களுடன் இருக்க வேண்டும். வாங்கிய தங்கத்திற்கு ரசீது, பரிசாகப் பெற்றதற்கு பரிசளிப்பு கடிதம், முன்னோர்களிடமிருந்து வந்ததற்கு சட்டபூர்வமான சான்றுகள் போன்றவை இருந்தால் வருமான வரி அதிகாரிகளுக்கு எந்த சந்தேகமும் எழாது.
ரசீது அவசியம்
ஆனால், பலர் தங்கள் தங்க நகைகளுக்கான ரசீதுகளை வைத்திருக்காமல் இருப்பது வழக்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டால், ஆவணமின்றி அதிக அளவில் தங்கம் இருந்தால் அது கணக்கிலிடப்படாத சொத்து என கருதப்பட்டு பறிமுதல் செய்யப்படலாம். இத்தகைய சூழ்நிலைகளைத் தவிர்க்க வருமான வரித்துறை சில பாதுகாப்பான அளவுகளை வழிகாட்டுதலாக வெளியிட்டுள்ளது.
பெண்கள் தங்கம்
அதன்படி, திருமணமான பெண்கள் அதிகபட்சம் 500 கிராம் தங்கம், திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம் தங்கம் மற்றும் திருமணமான அல்லது திருமணம் ஆகாத ஆண்கள் 100 கிராம் தங்கம் வரை வைத்திருந்தால், அது வழக்கமான குடும்ப நகைகள் எனக் கருதப்படும். இத்தகைய அளவுகளில் இருக்கும் தங்கம் பறிமுதல் செய்யப்படாது எனத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதை விட அதிக அளவு தங்கம் இருந்தாலும், அதன் வாங்கிய மூலத்தை நிரூபிக்க முடிந்தால் எந்த சிக்கலும் இல்லை.
தங்க ஆவணங்கள்
தங்கத்தின் வகைகளான நகைகள், தங்கக் கட்டிகள், நாணயங்கள் ஆகிய அனைத்தும் சேர்த்து இதே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே, திருமண நகைகள், பரிசாகப் பெற்ற நகைகள் போன்றவற்றின் பதிவுகளை வைத்திருப்பது மிகவும் அவசியம். மொத்தத்தில், ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருந்தாலும் அது சட்டத்திற்கு புறம்பானது அல்ல. ஆனால் அதன் மூல ஆதாரம் தெளிவாகவும், ஆவணங்களுடன் நிரூபிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதே வருமான வரித்துறையின் முக்கிய அறிவுறுத்தல்.












Click it and Unblock the Notifications