தமிழ்நாட்டில் நகராட்சிகளில் எத்தனை சதுர அடிக்கு எவ்வளவு சொத்து வரி? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
சென்னை: சட்டசபையில் நகராட்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் பேசும் போது, தமிழ்நாடு முழுவதும் மீண்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்று வாதிட்டார். அப்போது எத்தனை சதுர அடிக்கு எவ்வளவு சொத்து வரி? என்பது குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார். 600 சதுர அடிக்கு குறைவாக வைத்திருப்பவர்களுக்கு வரியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
சட்டசபையில் நகராட்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமா பேசினார். அப்போது ராஜேஷ்குமார் பேசும் போது, தமிழ்நாடு முழுவதும் மீண்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். பொதுவாக மாநில அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்தால், அவற்றை மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி மன்றத்தில் வைத்து, விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பிவைத்து, அதற்கு பின்னரே அமல்படுத்துவது வழக்கமாகும். ஆனால், அந்த நடைமுறை பின்பற்றப்படாமல், மத்திய அரசின் 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து, இவ்வளவு பெரிய வரிச் சுமையை விதிக்கும் முடிவினை தமிழக அரசு எடுத்திருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு நகராட்சி துறை அமைச்சர் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறும் போது, 15-வது நிதிக் குழு ஆணையை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. 600 சதுர அடிக்கு குறைவாக வைத்திருப்பவர்களுக்கு வரியில் எந்த மாற்றமும் இல்லை. 600 சதுர அடி முதல் 1,000 சதுர அடி வரையில் வைத்திருப்பவர்களுக்கு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வரியே அரசால் உயர்த்தப்பட்டது. 1,000 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வரை வைத்திருப்பவர்களுக்கு 50 சதவீதமும், 2,400 சதுர அடிக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு 100 சதவீதம் என்ற வகையிலும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இந்தச் சட்டம் எதற்கு என்றால், சென்னை போன்ற பகுதிகளிலும், பிற பகுதிகளிலும், 18 ஆண்டுகள், 20 ஆண்டுகள் வரி உயர்த்தப்படாமல் அப்படியே இருந்தபோது, அவற்றை சமச்சீர் செய்து கொண்டு வருகிறபோது, ஒரு வரி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் கூடுதலாக்கப்பட வேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டது என்று கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications