கோடி கோடியாக சிக்கிய பணம்.. சென்னையில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?
சென்னை: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் இன்று வரை சென்னையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கி வருகிறது. பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் சென்னையில் இதுவரை எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் லோக்சபா தேர்தல் என்பது மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த மார்ச் 16ம் தேதி அறிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் உடனடியாக நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன்படி பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக பணம் எடுத்து சென்றாலும், ரூ.10 ஆயிரத்துக்கும் அதிக மதிப்பிலான புதிய பொருட்களை கொண்டு சென்றாலும் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சோதனை நடத்தம் பறக்கும் படையால் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்கு சென்னையும் விதிவிலக்கல்ல. சென்னையில் மட்டும் மொத்தம் 3 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதனால் அங்கு கண்காணிப்பு என்பது தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இன்று சென்னை ரிப்பன் கட்டடத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்கான மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் இன்று நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையரும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை சென்னையில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛சென்னையில் தற்போது வரை ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக மொத்தம் ரூ.15.22 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் 15.2 கோடி என்பது பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரித்துறையால் ரூ.20 லட்சத்து 53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என்றார். இதன்மூலம் மொத்தம் 15.22 கோடி மதிப்புள்ள ரொக்கப்பணம் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications