மாணவி பாலியல் வழக்கு.. FIR ‘லீக்’ ஆனது எப்படி? சென்னை போலீஸ் கமிஷனர் அருண் சொன்ன பரபர தகவல்!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்.ஐ.ஆர் 'லீக்' ஆனது எப்படி என்பது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, மாணவரை மிரட்டி, அந்த மாணவியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர வைத்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் பதிவான எஃப்.ஐ.ஆர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டமாக இருக்கின்ற சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பெண்ணின் பெயர், முகவரி, அவர் எந்த துறையில் படித்து வருகிறார்?, எந்த நபருடன் தனியாக அமர்ந்திருந்தார்? என்பது குறித்த பல்வேறு விவரங்களுடன் கூடிய எஃப்.ஐ.ஆர் நகல் லீக் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தையோ, எஃப்.ஐ.ஆர் நகலையோ இணையத்தளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எஃப்.ஐ.ஆர் லீக் ஆனது குறித்து எதிர்க்கட்சிகள், தமிழக காவல்துறையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கையை கோரி வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்தும், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை 'லீக்’ ஆனது குறித்தும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாதிக்கப்பட்டவர்கள் புகாரில் என்ன சொல்கிறார்களோ, அதை அப்படியே பதிவு செய்வதுதான் எஃப்.ஐ.ஆர். இந்த வழக்கிலும் அப்படித்தான் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. எஃப்ஐஆர் இப்படி பதிவு செய்திருக்க வேண்டும், அப்படி பதிவு செய்திருக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்ஐஆர் கசிந்திருக்கிறது.
போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எஃப்.ஐ.ஆர் எனும் முதல் தகவல் அறிக்கை, சிசிடிஎன்எஸ் (கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் அண்ட் சிஸ்டம்ஸ்) எனும் ஆன்லைன் போர்ட்டலில் தானாகவே லாக் ஆகித்தான் இருக்கும். பாதிக்கப்பட்டோரின் விபரங்களை யாரும் பார்க்க முடியாது. ஆனால், IPC-யில் இருந்து புதிய சட்டங்களான BNS-க்கு மாற்றப்பட்டதால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாக் ஆவதில் சற்று தாமதம் ஆகியுள்ளது.
“ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி.. வேறு யாருக்கும் தொடர்பில்லை" சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி
அந்த நேரத்தில் சிலர் அதனை பதிவிறக்கம் செய்திருக்கலாம். மேலும், எந்த எஃப்ஐஆரை பதிவு செய்தாலும், புகார்தாரருக்கு ஒரு காப்பி கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட தரப்புக்கும் FIR நகல் கொடுக்கப்பட்டது. இந்த 2 இடங்களிலும் ஏதாவது ஒரு வழியில் தான் FIR லீக் ஆகியிருக்கக்கூடும்.
இதுபோன்ற வழக்குகளில் எஃப்ஐஆர் வெளியே வந்திருக்கக்கூடாது. அவ்வாறு வெளியிடுவது சட்டப்படி குற்றம். அதேபோல், அதை எடுத்துவைத்து விவாதிப்பதும் சட்டப்படி குற்றம். பாதிக்கப்பட்டவரின் அடையாளம் எந்த வகையிலும் வெளியே தெரியக் கூடாது. நாம் கொடுக்கும் தகவல்களை வைத்தே பாதிக்கப்பட்ட நபரை கண்டுபிடிக்க முடியும் என்ற அளவுக்கு தகவல் தெரிவித்தாலே அதுவும் தவறு. எஃப்ஐஆர் கசிவு தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications