கிராம நத்தம் நிலம் வைத்திருப்போருக்கு குட்நியூஸ்.. நத்தம் இணையவழி பட்டா மாறுதல் இனி எப்படி?
சென்னை: கிராமப்புற மக்கள், அவர்களுடைய நத்தம் வீட்டுமனைக்கு பட்டா வாங்குவதில் சில சிரமங்களை சந்தித்து வந்த நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் செய்யப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தள்ளார்.
நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் பொதுமக்களுக்கு நிலம் தொடா்பான பல்வேறு தேவைகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே நில ஆவணங்கள் பெறவும், இணையவழியில் பட்டா மாறுதல் உத்தரவுகள் பெறவும் தமிழ்நாடு அரசால் வழிவகை செய்துள்ளது.

இந்நிலையில், நத்தம் நில ஆவணங்களை இணையவழி சேவைக்கு கொண்டு வரும் திட்டத்தின்கீழ் நத்தம் ஆவணங்கள் இணையவழி சேவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே நத்தம் நிலங்களில் பட்டா மாறுதல் செய்யவும் அல்லது உட்பிரிவு செய்துகொள்ளவும், சம்பந்தப்பட்ட மனுக்களை பொது சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், எந்த நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் இணையவழி சேவையின் மூலம் நத்தம் அ-பதிவேடு, சிட்டா மற்றும் புல வரைப்படங்கள் போன்ற நில ஆவணங்களை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன் பெற முடியும்.
இதனிடையே இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறையில் நேற்று கூறுகையில், "மிக முக்கியமான திட்டத்தையும் இங்கே தொடங்கி வைத்திருக்கிறேன். ''நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்'' என்று இதற்குப் பெயர். கிராமப்புற மக்கள், அவர்களுடைய நத்தம் வீட்டுமனைக்கு பட்டா வாங்குவதில் சில சிரமங்களை சந்தித்து வருவதாக தெரியவந்தது. அதை எளிமையாக்குவதுதான் இந்த புரட்சிகரமான திட்டம்.
தமிழ்நாடு வருவாய்த்துறை வரலாற்றிலேயே, கிராமப்புற நத்தம் பட்டாவை கணினி மூலமாக வழங்குவது இதுதான் முதல்முறை. காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் பாடினார். அதைக் கணினி மூலமாக உறுதி செய்கின்ற திட்டம் இது. முதல்கட்டமாக, 75 லட்சத்து 33 ஆயிரத்து 102 பட்டாதாரர்கள் இந்த இணையவழி சேவை மூலமாக பயன்பெற போகிறார்கள்" என்றார்.
முன்னதாக 2023-24 பட்ஜெட்டை கடந்த ஆண்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கையில், நத்தம் நிலங்களுக்கு விரைவில் இணையவழி பட்டா மாறுதல் முறை கொண்டுவரப்படும் என்று கூறியிருந்தார். அது தற்போது அமலுக்கு வந்துள்ளது.
கிராம நத்தம் பட்டாக்கள் அரசு புறம்போக்கு நிலங்களாக கருதப்படுவதாலும், பல நுாற்றாண்டுகளாக மக்கள் வாழும் பகுதிகளாக இருந்ததாலும், அவற்றை அனுபவ ஸ்வாதீன இடங்களாக கருதி, 1991ல் நத்தம் பட்டாவாக அளவீடு செய்து, அப்போதைய உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதுவரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாத நிலை இருந்தது. இந்நிலையில் அதனால் அவற்றை கணக்கீடு செய்து, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை தொடங்கிய நிலையில், இப்போது ஆன்லைனிலேயே நத்தம் இணையவழி பட்டா மாறுதல் செய்ய முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
நத்தம் நிலம் தொடர்பான விவரம் ஆன்லைன் மயமாகியுள்ளதால், வழிகாட்டி மதிப்பு விரைவில் நிர்ணயம் செய்யப்படும். கிராம நத்தம் மற்றும் நகரப்புற நத்தம் நிலத்தில் வசிப்பவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற போகிறது. அரசு வழங்கிய பட்டா மற்றும் பத்திர அடிப்படையில், உரிமையாளர் முழுமையான உரிமைகளை இனி பெற முடியும்.
நத்தம் இணையவழி பட்டா மாறுதல் எப்படி : நிலத்தின் முதல் ஆக்கிரமிப்பாளராக, உங்களின் உரிமையைப் பெற நீங்கள் பட்டாவிற்குeservices.tn.gov.in. என்ற ஆன்லைன் தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு உங்கள் அடையாளச் சான்று உட்பட தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். நிலத்தை உங்கள் பெயருக்கு மாற்ற குறைந்த கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு செயலாக்கப்படும். உங்களுக்கு ஒரு விண்ணப்ப ஐடி ஒதுக்கப்படும். பின்னர் பட்டா உங்களுக்கு ஒதுக்கப்படும் இதுதான் நடைமுறை.. கிராம நத்தம் நிலத்தை குடியிருப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தவே முடியாது..












Click it and Unblock the Notifications