பார்சி முறையில்.. உடலை எரிக்கவும், புதைக்கவும் கூடாது.. டாடா உடலுக்கு எப்படி இறுதிச்சடங்கு நடந்தது?
சென்னை: 86 வயதான தொழில்துறை அதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு மகாராஷ்டிர அரசால் அரசு இறுதிச் சடங்கு வழங்கப்பட்டது. அவர் பார்சி மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரின் சமூகம் பின்பற்றும் சடங்குகளின்படி அவரது இறுதிச் சடங்குகள் நடந்தன. பின்னர் அவர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டார். அவரின் மத முறைப்படி உடலை எரிக்கவோ.. புதைக்கவோ கூடாது பின்னர் எப்படி இந்த இறுதிச்சடங்கு நடந்தது? வாருங்கள் பார்க்கலாம்.
பார்சிகள் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களைப் போல் இறந்தவர்களை தகனம் செய்யவோ அல்லது புதைக்கவோ மாட்டார்கள். மேலும் அவர்கள் ஒரு மனித உடலை இயற்கையின் பரிசாகக் கருதுவார்கள். அதனால் உடலை இயற்கைக்கே அதைத் திருப்பித் தர வேண்டும். பார்சிகள் ஜோராஸ்ட்ரிய நம்பிக்கைகளின்படி, தகனம் செய்வது அல்லது புதைப்பது இயற்கையின் கூறுகளான நீர், காற்று மற்றும் நெருப்பை மாசுபடுத்தும்.

அதன் அடிப்படையில் இன்று அதிகாலையில், இறுதிச் சடங்குகளுக்கு உடல் தயார் செய்யப்பட்டது. உடலைக் கழுவி, பாரம்பரிய பார்சி உடையில் அணிந்திருக்கும் நஸ்ஸேலர்கள் என்பவர்கள் உடலை சுத்தம் செய்தனர். இவர்கள்தான் அந்த மதத்தில் இறந்தவர்களின் உடலை கையாளுவார்கள். பின்னர் உடல் 'சுத்ரே' (பருத்தி உடுப்பு) போர்த்தப்பட்டு.. 'குஸ்தி' என்று அழைக்கப்படும் ஒரு வெள்ளை கயிறு மூலம் கட்டப்படும்.
இறுதி இளைப்பாறும் இடத்திற்கு உடலை எடுத்துச் செல்வதற்கு முன், பார்சி பாதிரியார்களால் பிரார்த்தனை மற்றும் ஆசீர்வாதம் செய்யப்பட்டது. இந்த சடங்குகள் இறந்தவரின் ஆன்மாவை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு சுமூகமாக மாற்ற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அஞ்சலி செலுத்தவும், இந்த பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டனர்.
பாரம்பரியமாக, உடல் அமைதி கோபுரம் எனப்படும் THE TOWER OF SILENCE க்கு கொண்டு செல்லப்படும், அல்லது பார்சிகளின் இறுதிச் சடங்குகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பான 'தக்மா'விற்கு கொண்டு செல்லப்படும். அவர்கள் முறைப்படி இறந்தவரின் உடல் 'தக்மா'வின் மேல் வைக்கப்படுகிறது. அங்கு இறந்தவரின் உடல் உறுப்புகள் பறவைகள், கழுகுகளுக்கு இரையாக கொடுக்கப்படும்.
'டோக்மெனாஷினி' என்று அழைக்கப்படும் இந்த நடைமுறை, நெருப்பு, பூமி மற்றும் நீர் ஆகிய புனித கூறுகளை மாசுபடுத்தாமல் உடல் இயற்கைக்குத் திரும்புவதை உறுதி செய்கிறது. கழுகுகள் சதையை உட்கொள்கின்றன, மேலும் எலும்புகள் இறுதியில் கோபுரத்தின் மையக் கிணற்றில் விழும், அங்கு அவை மேலும் சிதைந்துவிடும். இதனால் இயற்கை பாதிக்காது.
ஆனால் இந்த முறையை இப்போது கடைபிடிக்க முடியாது. தற்போதைய சுற்றுச்சூழல் மற்றும் நடைமுறை சவால்கள் மற்றும் கழுகு மக்கள்தொகையின் சரிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இறுதிச் சடங்கு நவீனமாக மாற்றப்பட்டு உள்ளது. டாடா பார்சி மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரின் சமூகம் பின்பற்றும் சடங்குகளின்படி அவரது இறுதிச் சடங்குகள் நடந்தன. எல்லா சடங்குகளும் செய்யப்பட்டன.
ஆனால் பின்னர் அவர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டார். அவரின் மத முறைப்படி உடலை எரிக்கவோ.. புதைக்கவோ கூடாது என்றாலும் சுற்றுச்சூழல் மற்றும் நடைமுறை சவால்கள் காரணமாக அவர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications