மகளிர் உரிமை தொகை வாங்கும் பெண்களுக்கு குட்நியூஸ்.. தமிழக ரேஷன் கடைகளில் வருது சூப்பர் வசதி
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் எல்லாமே இனி ஏடிஎம் மையங்களாக மாறுகிறது. இந்த ஏடிஎம் மையங்கள் எப்படி செயல்படும்.. எவ்வளவு பணம் எடுக்கலாம். கூட்டுறவுத்துறையின் திட்டம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். கிராமபுறங்களில் உள்ள எளிய மக்கள், பணம் எடுக்க வங்கிகளுக்கும், வங்கிகளின் ஏடிஎம்களுக்கும் மட்டுமே செல்ல வேண்டும் என்கிற நிலை இந்த புதிய திட்டத்தால் அடியோடு மாறுகிறது.
தமிழ்நாட்டில் இன்றைக்கு ஏழை எளிய மக்கள் தங்கள் வங்கி கணக்கில் பணம் எடுக்க வேண்டும் என்றால், ஏடிஎம்களுக்கோ, அல்லது வங்கிகளுக்கோ செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. கிராம புறங்களில் உள்ள பாமர மக்கள் பலர் ஏடிஎம்களில் பணம் எடுக்க தெரியாத காரணத்தால், ஒரு நாள் வேலைக்கு லீவு போட்டுவிட்டு பணம் எடுக்க அரை நாள் வங்கியிலேயே காத்திருக்கும் நிலை இருக்கிறது. மகளிர் உரிமை தொகை உள்பட அரசின் பல்வேறு மானிய தொகையை பெற பெண்கள் பலர், வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருப்பதை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.

இந்த சூழலில் தமிழ்நாட்டில், ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வினியோகம் செய்வதுடன் பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இயங்கும் ரேஷன் கடைகள் அனைத்தும் 'மைக்ரோ' ஏ.டி.எம்.களாக படிப்படியாக மாற்றப்பட உள்ளது.
'மைக்ரோ' ஏ.டி.எம். : தமிழ்நாட்டில் தற்போது கூட்டுறவுத்துறைகள் வாயிலாக செயல்படும் 4 ஆயிரத்து 500 ரேஷன் சங்கங்களில். 3 ஆயிரத்து 500 சங்கங்களில் ஏற்கனவே பணம் செலுத்தும் நடைமுறைகள் இருந்து வருகிறது. சில சங்கங்களில் பணம் எடுக்கும் நடைமுறைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில், அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் பணம் எடுக்கும் வசதி ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன்படி அனைத்து ரேஷன் கடைகளும் 'மைக்ரோ' ஏ.டி.எம். வசதி படிப்படியாக மேற்கொள்ளப்பட இருக்கிறது.
20 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம்: அதன்படி, கூட்டுறவுத்துறைகள் சார்பில் இயங்கும் 34 ஆயிரத்து 567 ரேஷன் கடைகளிலும் 'மைக்ரோ' ஏ.டி.எம். வசதி கொண்டுவரப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பணத்தை ரேஷன் கடைகளில் எப்படி பெறலாம்.. கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் ரேஷன் கடைகள் அனைத்திலும் பொதுமக்கள் ஆதார் கார்டு மூலமாக பணம் எடுக்கலாம். ரேஷன் கடை ஏடிஎம்கள் மூலம் வங்கிக்கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை எடுத்துக் கொள்ளலாம். இந்த வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.ஓ.எஸ். கருவியில் பணம் எப்படி கிடைக்கும்: எல்லா ரேஷன் கடைகளிலும் பி.ஓ.எஸ். (பாயிண்ட் ஆப் சேல்ஸ்) என்ற கையடக்க கருவி இருக்கிறது. இந்த கருவி எப்படி செயல்படுகிறது என்றால், அரிசி பருப்பை ஆதார் எண் அடிப்படையில் கைரேகை வைத்து தான் தரப்டுகிறது. அதே தொழில் நுட்பத்தின் அடிப்படையில் தான் பணமும் கிடைக்க போகிறது. அதன்படி ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து, அரசின் கூட்டுறவு வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றி பெறலாம்.
ஆதார் கார்டு: அதாவது இன்னும் தெளிவாக சொல்வது என்றால். வங்கிக்கணக்கு வைத்துள்ள ஒருவர் கூட்டுறவு வங்கியின் ரேஷன் கடைகளில் தங்களின் ஆதார் அட்டையை காண்பித்து தன்னை உறுதி செய்து கொள்ள வேண்டும், அவரது வங்கிக்கணக்கில் இருந்து அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை உள்ள தொகையை அவரது வங்கிக்கணக்கில் இருந்து கூட்டுறவு சங்க கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும். அதன் பிறகு அந்த நபருக்கு பணம் வழங்கப்படும். இதற்காக, ரேஷன் கடை ஊழியர்களிடம் ரொக்கப்பணம் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும். இந்த திட்டம் விரைவில் படிப்படியாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது என்று கூட்டுறவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications