சைவம் மட்டுமல்ல.. நான் வெஜ் ஹோட்டலிலும் அரசு பஸ்களை நிறுத்தலாம்.. யூ டர்ன் போட்ட தமிழக அரசு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்தப்படும் சாலையோர உணவகங்களுக்கான புதிய நிபந்தனைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது
சென்னை: அரசுப் பேருந்துகளின் தொலைதூரப் பயணங்களின்போது வழியில் நிறுத்தப்படும் உணவகங்களில், சைவ உணவகங்கள் மட்டுமல்லாது அசைவ உணவகங்களிலும் நிறுத்தலாம் என அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு புதிய நிபந்தனைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொலை தூர பயணங்கள் செல்லும் போது உணவுக்காகவும் ஓய்வுக்காகவும் பேருந்துகளை நிறுத்த தற்போது நிறைய சாலையோர உணவகங்கள் வந்து விட்டன. பயணிகளுக்கு வசதியான பல ஹோட்டல்கள் உள்ளன. தனியார் பேருந்துகள் பல சுத்தமான சுகாதாரமான இடங்களில் நிறுத்தி பயணிகளை சாப்பிட வைப்பார்கள்.
அரசுப் பேருந்துகளில் நெடுந்தூரம் பயணம் செய்யும் போது நிறுத்தப்படும் ஹோட்டல்கள் சுத்தமற்றதாக இருக்கும். கழிவறைகளுக்கு செல்பவர்கள் நோய்களை பரிசாக வாங்கிக் கொண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தமிழக அரசு நடவடிக்கை
நீண்ட தூர பயணத்தின்போது சாப்பிடுவதற்காக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில், உணவு, கழிப்பிட வசதி, விலை போன்றவற்றைக் குறித்துப் பல குற்றச்சாட்டுகள் முன்வைத்து வந்தனர். இதனையடுத்து ஆய்வு செய்த அதிகாரிகள் சுகாதாரமற்ற சாலையோர ஹோட்டல்களை மூடினர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்தப்படும் இது போன்ற உணவகங்களுக்கான புதிய நிபந்தனைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த நிபந்தனைகள்.

சைவ அசைவ உணவுகள்
உணவகங்களில் சைவ, அசைவ உணவுகளை சுத்தமாக விற்பனை செய்ய வேண்டும். உணவகத்தில் விற்கப்படும் உணவுப்பொருள்களின் விலைப்பட்டியல் பயணிகளுக்குத் தெளிவாகக் கண்ணில்படுபடி விலைப்பட்டியல் பலகை வைக்கப்பட வேண்டும். உணவுப்பொருள்களின் விலை, எம்.ஆர்.பி (MRP) விலையைவிட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.

சிசிடிவி கேமரா
உணவக வளாகத்தில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தியிருக்க வேண்டும். பேருந்தில் பயணிகளின் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும். அனைத்து உணவகங்களிலும் கண்டிப்பாக புகார்ப்பெட்டி இடம்பெற்றிருக்க வேண்டும்.

இலவச கழிப்பிட வசதி
கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். மேலும் பயோ-கழிவறை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சைவ உணவு மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில் திடீரென அந்த நிபந்தனையை தளர்த்தி அசைவ உணவும் விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

பயணிகள் கோரிக்கை
சுத்தமான சுகாதாரமான உணவு ருசியாக சமைத்து பரிமாறினால் பயணிகளும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள் வயிற்றுக்கும் தொந்தரவு இருக்காது. என்றோ ஒருநாள் சரியில்லாத தரமற்ற உணவை சாப்பிட்டு விட்டு நோயை விலைக்கு வாங்கியவர்களும் இருக்கிறார்கள் இதன்காரணமாகவே பலரும் வீட்டில் இருந்தே உணவு கொண்டு போகின்றனர். அரசு பேருந்து டிரைவர்கள்,கண்டக்டர்களும் சுத்தமான சுகாதாரமான ஹோட்டல்களில் நிறுத்த வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications