கொந்தளிக்கும் அதிமுக.. அரசியல் வரலாற்றில் நடந்ததை தான் கூறியிருக்கிறேன்.. விடாத அண்ணாமலை
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் கருத்து கூறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கூட்டணியில் உள்ள அதிமுக கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அதிமுகவின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், கூட்டணி கட்சியான அதிமுகவுக்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், "தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்வர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.
தமிழ்நாடு ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும். என்றார். தொடர்ந்து அ.தி.மு.க. உடனான கூட்டணி முறிய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, "எங்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் இருப்பு என்பது ஆட்சிக்கு வருவதற்கு தானே தவிர, எப்போதும் கூட்டணியில் நீடிப்பதற்காக அல்ல" என்று கூறியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்து அதிமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதிமுகவின் மூத்த தலைவர்களான ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்தனர். இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக தலைவர்களும் கருத்து கூற அதிமுக - பாஜக மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணாமலை அறிக்கை மூலமாக தனது பதிலை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களது தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எனக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக அறிகிறேன். அது மட்டும் அல்லாது நேற்று மற்றும் இன்று காலை, முன்னாள் தமிழக அமைச்சர்கள் சிலர் நான் ஆங்கில நாளேடுக்கு கொடுத்த பேட்டியை சரிவர புரிந்து கொள்ளாமல் எனக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
அவர்களைப் போல் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சகோதர சகோதரிகளுக்கும் சிலவற்றைத் தெளிவுபடுத்துவது எனது கடமையாக உணர்கிறேன். தமிழகத்தில் ஊழல்தான் முக்கியப் பிரச்சினை. இத்தனை ஆண்டு காலம் ஒவ்வொரு குடிமக்களையும் சென்று சேர வேண்டிய நலத் திட்டங்கள், அரசியல்வாதிகளால் சுரண்டப்பட்டு, இறுதியில் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்று சேர்ந்ததே இல்லை.

மக்களுக்கான நலத் திட்டங்களை இயற்றுவதை விட்டுவிட்டு, அதன் மூலம் சிலர் மட்டும் எவ்வாறு பயனடையலாம் என்ற நோக்கத்திலேயே திட்டங்கள் உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன. இத்தனை ஆண்டுகளில், அடித்தட்டு மக்கள் தங்கள் நிலையிலிருந்து ஒரு படி முன்னேறியிருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதில் தேர்தல் வாக்குறுதிகளில் இலவசமும், தேர்தலின்போது பணமும் கொடுத்தால் போதும், அடுத்த ஐந்து ஆண்டுகளும் இந்த மக்களைச் சூறையாடலாம் என்ற எண்ணத்திலேயே ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள்.
ஏழை எளிய மக்களை எப்போதும் கையேந்தி நிற்கும் நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். இந்த வகையான அரசியலை நான் வெறுக்கிறேன். நரேந்திர மோடி அவர்களைப் பார்த்து அவரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைக்கும் அந்த ஒற்றை மனிதரின் வழியில், தமிழகத்தில் நேர்மையான, மக்கள் நலனுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன்.
அந்த ஒற்றை எண்ணத்துடன், இன்று மட்டும் அல்ல என்றுமே எனது அரசியல் பயணம் தொடரும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமை பட்டுள்ளேன். ஊழலின் தலைநகரம் தமிழகம் என்ற போக்கினை மாற்றி ஊழலற்ற நல்லாட்சி வழங்கிட வேண்டும் என்பதே எனது ஒற்றை ஆசை மற்றும் லட்சியம் ஆகும். கூட்டணிக் கட்சியையும், கூட்டணித் தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி தர்மம் நன்கு உணர்ந்தவன் நான்.

தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதைக் கூறியிருக்கிறேன். ஆங்கில நாளேடுக்கு நான் கொடுத்திருந்த பேட்டியில், உண்மைக்குப் புறம்பாக ஏதேனும் கூறியிருந்தேன் என்று யாராவது நினைத்தால், அந்தத் தவறைச் சுட்டிக் காட்டித் தெளிவுபடுத்தினால், அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அதே சமயம், கூட்டணியில் இருக்கிறோம். என்பதற்காக. கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் நாங்களும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது.
எனது மனசாட்சிப்படிதான் இங்கு அரசியல் செய்ய வந்துள்ளேன். அடுத்த இருபது முப்பது வருடங்களில், தமிழகம் எவ்வாறு முன்னேறியிருக்க வேண்டும், தமிழக மக்கள் வாழ்க்கை எவ்வாறு மேம்பட்டிருக்க வேண்டும், தமிழக இளைஞர்கள், மாணவர்கள் எந்த உயரத்தை அடைந்திருக்க வேண்டும் என்பதை நோக்கித் தான் எனது அரசியல் பயணம் இருக்குமே அன்றி, குறுகிய கால லாப நோக்கங்களுக்காக, இன்றும் நாளையும் கிடைக்கும் தற்காலிக வெற்றிகளுக்காக, தமிழகத்தின் எதிர்காலம் குறித்த எனது கனவுகளை விருப்பமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications