உதயநிதி பேச்சால் கொந்தளிப்பு: “இன்றும் சொல்வேன்.. என்றும் சொல்வேன்! சனாதனத்தை ஒழிப்போம்!” தடதட சவால்
சென்னை: சனாதனத்தை டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்களோடு ஒப்பிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது வட மாநிலங்கள் வரை பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது. இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட உரிமை கண்காணிப்பகம் எச்சரித்த நிலையில், எந்தச் சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயார் என சூளுரைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று (சனிக்கிழமை) 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயர் வைத்த மாநாட்டு ஏற்பாட்டு குழுவுக்கு பாராட்டு தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே சிறந்தது எனத் தெரிவித்தார். டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற தொற்று நோய்களை எதிர்க்க போராட மாட்டோம். ஒழித்துக்கட்டத் தான் முயற்சிப்போம். அதுபோல தான் சனாதனம் என்றும் உதயநிதி ஸ்டாலின்தெரிவித்தார்.
மேலும், சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம் எனப் பேசியது வட மாநிலங்கள் வரை சென்று சேர்ந்துள்ளது. இதுகுறித்து வட மாநிலங்களைச் சேர்ந்த நெட்டிசன்களும் பதிவிட்டனர். இதுகுறித்த செய்தி ஒன்றை பகிர்ந்து சட்ட உரிமை கண்காணிப்பகம் என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், "கொண்டு வாருங்கள், நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம்.
Bring it on. I am ready to face any legal challenge. We will not be cowed down by such usual saffron threats. We, the followers of Periyar, Anna, and Kalaignar, would fight forever to uphold social justice and establish an egalitarian society under the able guidance of our… https://t.co/nSkevWgCdW
— Udhay (@Udhaystalin) September 2, 2023
இதனை இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன், என்றென்றைக்கும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் இருந்து ஒரு துளி கூட பின்வாங்க மாட்டோம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் சனாதானம் குறித்த பேச்சு, புயலைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications