அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது.. ஒன்றரை ஆண்டுகளில் சீரமைப்போம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலமாக சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் மழை பாதிப்பால் சீரழிந்துள்ளது. அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட பாதிப்பை ஒன்றரை ஆண்டுகளில் சரி செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்காளில் தொடர்ந்து 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

பாதிப்பு குறைவு
தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலரது வீட்டிற்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். இருந்தும் தமிழக அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளால், மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது.

எச்சரிக்கையுடன் தமிழக அரசு
அதுமட்டுமல்லாமல் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மழை பாதிப்புகள் குறைக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இருந்தும் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசு எச்சரிக்கையுடன் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின் ஆய்வு
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை, வெள்ள பாதிப்புகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதுமட்டுமல்லாமல் பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆய்வு மேற்கொண்டார். இதில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சீரழித்த அதிமுக
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், வடசென்னையில் சில பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர், அப்புறப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சென்னையை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே சீரழித்து சென்றுள்ளார்கள். அதனை சரிசெய்வதற்கு பல ஆண்டுகளாகும். ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்குள் நாங்கள் முடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications