"ஐ டோன்ட் லைக்.." அண்ணாமலை கருத்துக்கு நேர் எதிராக சொன்ன குருமூர்த்தி.. பரபரப்பு பேச்சு
சென்னை : தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியது எனக்கு பிடிக்கவில்லை எனவும், பாஜக இந்த தவறை செய்யக் கூடாது என துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி கூறியது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில் இந்தியாவில் ஆங்கிலத்திற்கு மாற்றாக அலுவல் மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மேலும், பாஜக இந்தி திணிப்பை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் என பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தி திணிப்பு
இந்தச் சூழலில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் அமித்ஷாவின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தமிழ்தான் இணைப்பு மொழி என்று கூறினார். ரஹ்மானின் இந்த பதிலுக்கு தமிழ்நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் தமிழக பாஜக தெளிவாக இருக்கிறது." என்றார்.

பாஜக அண்ணாமலை
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியை திணிக்க முயற்சித்தால் தமிழக பாஜக நிச்சயம் அதனை எதிர்க்கும். இந்தி திணிப்பு முயற்சியை எந்தவிதத்திலும் தமிழக பாஜக ஏற்காது. தாய்மொழி தமிழ்தான் நமக்கு பெருமை, இந்தியால் நமக்கு பெருமையில்லை .அந்நிய மொழியான ஆங்கிலமும் , இந்தியும் ஒன்றுதான் எனக்கு" என கூறியிருந்தார்.

இந்தி பேசமாட்டேன்
மேலும், "நான் இந்தி பேசமாட்டேன். ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியது அனைவருக்கும் பெருமை. தமிழ் இந்தியாவின் இணைப்பு மொழியாக வேண்டும் என்று கூற அவருக்கு கருத்து சுதந்திரம் உள்ளது" எனவும் அண்ணாமலை கூறினார். அவரது இந்த கருத்து தமிழகத்தில் வரவேற்பு பெற்ற போதிலும், மத்திய அரசும், பாஜக தலைவர்களில் சிலரும் இதனை விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனை நீரூபிக்கும் வகையில் தான் நேற்று ஒரு சம்பவம் நடந்தது.
Recommended Video

துக்ளக் குருமூர்த்தி
பழபெரும் நடிகரும், பத்திரிகையாளருமான சோ உருவாக்கிய துக்ளக் இதழின் 52வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய குருமூர்த்தி, "தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என அண்ணாமலை பேசியது எனக்கு பிடிக்கவில்லை. பாஜக இந்த தவறை செய்யக் கூடாது. மத்திய அரசு இதில் தோல்வி அடைந்திருக்கிறது." என பேசினார். இது தமிழக பாஜகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications