அப்படியே ஸ்தம்பித்து போன சென்னை! 3 மணி நேரத்திற்கு பிறகு க்ளியரான டிராபிக்.. நிம்மதி அடைந்த மக்கள்
சென்னை: இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியினால் சென்னை மெரினாவில் சுமார் 15 லட்சம் பேர் திரண்டிருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஒரே நேரத்தில் கிளம்பியதால் சென்னை காமராஜர் சாலை, அண்ணாசாலை, ராதாகிருஷ்ண சாலை, சென்னை வாலாஜா சாலை, சாந்தோம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு சுமார் 3.30 மணி நேரம் நீடித்த போக்குவரத்து நெரிசல் தற்போது சீராகியுள்ளது.
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவையொட்டி, சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச கண்காட்சி நடைபெற்றது. 2003 ஆம் ஆண்டு விமான கண்காட்சி நடைபெற்றது. அதன்பிறகு 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விமான கண்காட்சி நடை பெறுவதால் மக்களிடையே ஆர்வம் அதிகரித்தது. இந்த விமானப்படையின் சாகசத்தை காண சென்னை மெரினாவிற்கு இன்று காலையில் இருந்தே மக்கள் சாரை சாரையாக அணிவகுக்க தொடங்கினர்.

இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெரினா கடற்கரை நோக்கி வாகனங்கள் அணி வகுத்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அலைமோதியது. சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் பயணிகள் நிற்க கூட முடியாத அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
மும்பை புறநகர் ரயில்களில் ஏறுவதற்கு கூட்டம் எந்த அளவு காணப்படுமோ அதை விட ஒரு படி மேலே என்று சொல்லும் அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு வழியாக எப்படியோ வந்து சேர்ந்த மக்கள் விமான சாகச நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். அதேபோல் சாகச நிகழ்ச்சி முடிந்ததும் ஒரே நேரத்தில் பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு கிளம்பினர். பல லட்சம் பேர் ஒன்றாக புறப்பட்டு சென்றதால், கடற்கரையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலில் சிக்கி 20-க்கும் அதிகமானவர்கள் மயங்கினர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டது. அதே போல, சொந்த வாகனங்களில் வந்தவர்கள் ஒரே நேரத்தில் தங்கள் வாகனங்களில் வீடுகளுக்கு புறப்பட்டதால் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மணி நேரமாக வாகனங்கள் சாலையில் ஸ்தம்பித்து நின்றன. ரயில்கள், மெட்ரோ ரயில்கள் மற்றும் பஸ்களில் பயணித்தவர்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து சென்றனர்.
இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக சில ஆம்புலன்களும் சிக்கின. இப்படி பல மணி நேரமாக மொத்த சென்னையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னை மெரினா கடற்கரை, சாந்தோம் சாலை, அண்ணாசாலை வரை பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணியளவில் நிறைவடைந்த நிலையில் ஒரே நேரத்தில் அனைவரும் கிளம்பியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் நகர கூட முடியாமல் அப்படியே அரை மணி நேரத்திற்கும் மேலாக நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சுமார் 3 மணி நேரம் வரை வாகனங்கள் ஒவ்வொரு இஞ்சாக நகர்ந்து சென்றது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாகன போக்குவரத்து நெரிசல் படிப்படியாக தற்போது குறைந்துள்ளது. மாலை 5.30 மணி அளவில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சீராகி இயல்பு நிலைக்கு திரும்பியது.
சென்னை சாலைகளில் கார்களை அப்படியே விட்டு சென்ற மக்கள்! டிராபிக்கால் ஸ்தம்பித்த தலைநகர்! நடந்தே பயணம்
சென்னை காமராஜர் சாலை, அண்ணாசாலை, ராதாகிருஷ்ண சாலையில் போக்குவரத்து சீரானது. இதேபோன்று சென்னை வாலாஜா சாலை, சாந்தோம் சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலும் சீராகியது. டிஜிபி அலுவலகம் அருகே உள்ள ராதாகிருஷ்ண சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் நீடித்த நிலையில் தற்போது போக்குவரத்து சீராகியது. இதேபோல் சுமார் 15 லட்சம் பேரால் நிரம்பியிருந்த சென்னை மெரினா கடற்கரையும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
எனினும் மெரினா கடற்கரையில் தண்ணீர் பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், ஸ்நாக்ஸ் பாக்கெட் கவர்கள் என குப்பைகள் கிடப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னை கடற்கரையில் காலை 11 மணிக்கு விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியது. 77 விமானங்கள் இந்த சாகசத்தில் ஈடுபடுத்தப்பட்டன. 2 மணிநேரமாக நடந்த வான் சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications