சென்னை சாலைகளில் கார்களை அப்படியே விட்டு சென்ற மக்கள்! டிராபிக்கால் ஸ்தம்பித்த தலைநகர்! நடந்தே பயணம்
சென்னை: சென்னை மெரினாவில் இன்று நடந்த விமான வான் சாகச நிகழ்ச்சியை காண 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கூடினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நகர்ந்து செல்ல முடியாததால் பொதுமக்கள் தங்களின் கார்களை சாலையோரம் நிறுத்தவிட்டு நடந்தே வீடுகளுக்கு சென்றனர்.
நம் நாட்டின் பாதுகாப்புக்காக விமானப்படை தொடங்கி 92 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. விமானப்படை தற்போது 93வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் இன்று இந்திய விமானப்படை சார்பில் விமான சாகச நிகழ்ச்சிகள் நடந்தது.

சென்னை கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த விமான சாகச நிகழ்ச்சி 2 மணிநேரம் நடந்தது. மதியம் 1 மணிக்கு விமானப்படை சாகச நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பயங்கரவாதிகளிடம் பணயக்கைதிகளாக சிக்கியவர்களை மீட்பது, ஹெலிகாப்டரில் இருந்து நிலத்தில் இறங்கி மீட்பு பணி மேற்கொள்வது உள்ளிட்டவற்றை வீரர்கள் கண்முன் நிகழ்த்தி காட்டினர்.
அதுமட்டுமின்றி இந்திய விமானப்படையின் போர் விமானங்களின் சாகசங்கள் மக்களை கவர்ந்தது. ரஃபேல், நம் நாட்டு தயாரிப்பான தேஜஸ், சாரங் ஹெலிகாப்டர், இலகுரக ஹெலிகாப்டர் உள்பட பிற விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து ஒன்றோடொன்று மோதுவது போல் பயணித்து விலகி சென்று மக்களை வியப்பில் ஆழ்த்தியது. அதோடு மின்னல் வேகத்தில் வானில் வண்ண புகையை கக்கியபடி அணிவகுத்து சென்ற விமானங்கள் பார்வையாளர்களின் மனங்களை கவர்ந்தது.
இந்த சாகச நிகழ்ச்சியை 15 லட்சம் பேர் கண்டு ரசித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த விமான சாகச நிகழ்ச்சியை காண காலை 8 மணி முதலே சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரை நோக்கி பயணிக்க தொடங்கினர். இதனால் கடற்கரையை நோக்கி செல்லும் ரோடுகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அலைமோதியது.
அதேபோல் சாகச நிகழ்ச்சி முடிந்ததும் ஒரே நேரத்தில் பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு புறப்பட்டனர். இதனால் கடற்கரையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 20க்கும் அதிகமானவர்கள் மயங்கினர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு ஒரே நேரத்தில் பார்வையாளர்கள் தங்களின் வாகனங்களில் வீடுகளுக்கு புறப்பட்டதால் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரயில்கள், மெட்ரோ ரயில்கள் மற்றும் பஸ்களில் பயணித்தவர்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து சென்றதால் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத நிலை உருவானது.
நீண்ட நேரமாக வாகனங்கள் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய சூழல் நிலவியது. இதனால் திருவல்லிக்கேணி பகுதியில் சிலர் தங்களின் கார்களை சாலையோரம் நிறுத்திவிட்டு நடந்து வீடுகளுக்கு பயணித்தனர். மக்கள் கூட்டம் கலைந்த பிறகு மீண்டும் வந்து கார்களை எடுத்து செல்லலாம் என்ற முடிவில் அவர்கள் இதை செய்தனர். இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக சில ஆம்புலன்ஸ்களும் சிக்கின. இதனால் சென்னை விமான சாகச நிகழ்ச்சியால் மொத்த சென்னையும் இன்று ஸ்தம்பித்து போனது.












Click it and Unblock the Notifications