மெரீனா விமான நிகழ்ச்சிக்குப் போனவரா நீங்கள்..? "Be Careful" இதைப் படிக்கவும்: டாக்டர் அட்வைஸ்..!
சென்னை: தொடர்ந்து வெயிலின் தாக்கத்தில் சிக்கிக் கொண்டால் ஏற்படும் வியாதிகள் என்ன? அதனால் என்ன மாதிரியான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பது பற்றி டாக்டர் சபரி மிக நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.
மெரீனா கடற்கரையில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற விமானப் படை சாகச நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசிப்பதற்காகக் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் ஒரே நேரத்தில் குவிந்தனர். மதியம் உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் நேரத்தில் கொஞ்சம் கூட நிழல் இல்லாததால் கலந்துகொண்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடுமையான வெயில் தாக்கியதால் 5 பேர் இதுவரை உயிரைப் பறிகொடுத்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த 5 பேர் மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின்தான் பொறுப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் இதை அரசியலாக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். ஆளும் தரப்பு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்கிறது. எதிர் தரப்பு ஆளும் கட்சி கோட்டைவிட்டுவிட்டது என்கிறது. இந்த அரசியல் சண்டையில் அப்பாவி உயிர்கள் பலியாகி இருக்கின்றன. அதற்கு இழப்பீடு 5 லட்சம் தரப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நடக்க என்ன காரணம்? மருத்துவ ரீதியான விளக்கம் பெறவும் ஒரு விழிப்புணர்வை மக்களுக்கு தருவதும் அவசியம். இது பற்றி டாக்டர் சபரிநாத் ரவிசந்திரன் பேசுகையில், "இந்த 5 பேர் இறப்புக்கும் வெயில் ஒரு காரணமாக இருக்கலாம். அதைத்தாண்டி காற்று பரிமாற்றம் என்பது முக்கியம். அல்லது காற்றோட்டம் என்றும் சொல்லலாம். உடனே பலர் கடற்கரையில் வீசாத காற்றா? அங்கே என்ன காற்றுக்குப் பஞ்சம் எனக் கேட்கலாம். கடலிலிருந்து அலை கரையை நோக்கி வீசிக் கொண்டே இருக்கும்.
அங்கே ஒரே சமயத்தில் 15 லட்சம் பேர் கூடுகிறார்கள். அங்கே உள்ளவர்கள் அனைவரும் சம அளவில் இருக்கமாட்டார்கள். உட்கார்ந்து பார்ப்பதற்கு ஏற்ற அடுக்க வரிசையில் இருக்கைகள் போடப்படவில்லை. அப்படி இருக்கும் போது காற்றின் நடமாட்டம் தடுக்கப்படும். ஒருவர் உயரமாகவும் ஒருவர் குள்ளமாக இருக்கலாம். அப்படி எனில் அங்கே காற்று பரிமாற்றம் சீராக நடக்காது. அதனால் இயல்பாகச் சுவாசிக்க முடியாத அளவுக்கு ஒரு அழுத்தம் உருவாகும்.
அடுத்தபடியாக வெயிலின் தாக்கம். இந்த விமானப் படை சாகச நிகழ்ச்சி காலை 11 மணிக்குத் தொடங்கி இருக்கிறது. மதியம் 12 மணி வரை நடந்துள்ளது. அன்று வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் இருந்துள்ளது. உச்சிவெயில் மண்டையைப் பிளக்கும் போது வியர்வை அதிகரிக்கும். உடலின் சூடு அதிகமாகும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும் போது அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். மெரினாவில் 15 லட்சம் பேருக்கும் குடிக்க நீர் இருக்க வாய்ப்பே இல்லை. அதனால் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

ஒரு பக்கம் காற்று பரிமாற்றம் சீராக இல்லை. மற்றொரு பக்கம் வெப்பநிலை அதிகமாக உள்ளது. அதனால் நீர்ச்சத்து குறைவு ஏற்படுகிறது. இப்படி ஒரே நேரத்தில் 3 பிரச்சினைகள் உடலைத் தாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெப்பநிலை அதிகரிப்பால் 4 விதமான உடல் பாதிப்புகள் ஏற்படும். இந்த மெரீனா சம்பவத்தில் Heat Stroke, Heat syncope என்ற 2 விதமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. Heat syncope என்பது அதிக வெப்பம் தாக்கும்போது உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் மூளைக்குப் போகும் ரத்தம் குறையும். சோடியம் அளவு குறையும். பிபி அளவும் பாதிக்கப்படும். இதனால் ஒருவர் திடீரென்று மயக்கம் போட்டு கீழே விழுவார்.
அடுத்து Heat Stroke. ஒருவரின் தலையில் தாங்க முடியாத அளவுக்கு வெயில் விழும்போது மண்டை அதிக சூடாகும். மூளையில் நமது உடலைக் குளுமையாக வைத்து கொள்ளவதற்காக ஒரு பகுதி உள்ளது. அது சமநிலை குலையும். இதனால் உடல் 40டிகிரி வெப்பநிலை அளவைக் கடக்கும். அதனால் ஒருவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குக் கொண்டு செல்லப்படுவார். இதுதான் 5 பேர் உயிரிழப்புக்குக் காரணமாக மாறியுள்ளது.
இந்த மாதிரி வெயிலில் தொடர்ந்து நிற்பதால் மேலும் சில உபாதைகள் அடுத்தடுத்த நாட்களில் ஏற்படலாம். அதற்கு Heat exhaustion, Heat cramps என்று சொல்வார்கள். Heat cramps என்பது முதல் நாள் ஒன்றும் தெரியாது. மறுநாள் உடல் சோர்வு, தலைவலி, அசதி,தசை பிடித்தம் என சில உபாதைகளை உண்டாக்கும். Heat exhaustion வந்தால் அந்த நபர் எரிச்சல் வந்ததுபோல் பேசுவார். காரணமே இல்லாமல் கத்திக் கொண்டே இருப்பார். அதிகமாகக் கோபம் வரும். இந்தப் பாதிப்பை இன்று நாளையும் இருக்கும். ஆனால், மரண பாதிப்பைப் போன்று வெளியே தெரியாது. வீட்டுக்குள்ளாகவே இருக்கும்.

மெரீனாவுக்கு ஒரு குடும்பம் வருகிறது என்றால் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுடன் வருவார்கள். அது அரை மணிநேரத்திற்கு காலியாகி விடும். குறைந்த பட்சம் ஒருவர் மட்டுமே 3 லிட்டர் தண்ணீர் எடுக்க வேண்டும். 15 லட்சம் பேருக்கும் இதே அளவுக்கு நீர் வேண்டும். அந்தளவுக்குத் தண்ணீர் அங்கே இல்லை. காற்றோட்டமும் இல்லை. தண்ணீரும் பற்றாக்குறை. இதனால்தான் 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்களுக்குத் தெரிந்த பாதிப்பு. கணக்கில் வராத பாதிப்புகளும் உள்ளன.
இது இந்த வெயில் தாக்கத்தால் வந்த பிரச்சினை மட்டுமே. பலருக்கும் ஏற்கெனவே இணை நோய்கள் இருந்திருக்கக்கூடும்.பிபி, சுகர் என சில வியாதிகளும் இருந்திருக்கலாம். அதன் தாக்கமும் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணம். பலரும் நிகழ்ச்சி முடிந்த உடனேயே வெளியே வர முடியவில்லை. கிட்டத்தட்ட 3 மணி வரை போக்குவரத்து பாதிப்பு. இதனால் உணவு கிடைக்காமல் தவித்தவர்கள் பலர். எனவே இந்த மரணத்திற்கு மக்களைக் குறை சொல்ல முடியாது. அதற்கான ஏற்பாட்டைச் செய்தவர்கள் சரியாகச் செய்யவில்லை. அரைகுறையாக இருந்த வசதிகள்தான் சிலரின் உயிரைப் பறித்துள்ளன" என்கிறார்.












Click it and Unblock the Notifications