தினகரனை நம்பினால் நடுத்தெருதான்... சதிவலையை தூள்தூளாக உடைப்போம் - வேலூரில் முதல்வர் ஆவேசம்
திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் மறைமுகமாக உதவி வருகின்றனர், அதை அதிமுக முறியடிக்கும் என்றும் சதி வலையை தூள் தூளாக உடைப்போம் என்றும் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் சதி திட்டம் தீட்டுகின்றனர். சிலரது சதி திட்டத்தை முறியடிப்போம். சதிவலையை தூள்தூளாக உடைப்போம் என்று வேலூரில் ஆவேசமாக பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வழக்கமாக தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவுக்கு எதிராக பேசி வரும் முதல்வர் பழனிச்சாமி, முதன்முறையாக பிரச்சார கூட்டத்தில் டிடிவி தினகரனுக்கு எதிராக பேசியுள்ளார்.
பெங்களூருவில் இருந்து சென்னை வந்த சசிகலா, அதிமுக மீண்டு எழும் என்றும் ஒரு தாய் பிள்ளைகளாக இணைந்து திமுகவை எதிர்ப்போம் என்று கூறினார். அன்புக்கு நான் அடிமை என்று சொன்ன சசிகலா, அதிகாரத்திற்கு நான் அடிபணிய மாட்டேன் என்றும் சொன்னார். தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொன்ன சசிகலா, திமுகதான் பொது எதிரி என்று சொன்னார்.

டிடிவி தினகரன் தனது பேட்டியில், ஜனநாயக ஆயுதம்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திமுக ஆட்சியைப் பிடிக்க விடமாட்டோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
அமமுகவைத் தொடங்க முக்கிய காரணம் அதிமுகவை மீட்டெடுப்பதற்கும், தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை நிலைப்பதற்கும்தான். மராமத்து பணிக்காக அதிமுக அலுவலகத்தை மூடி வைத்திருப்பதாக கேள்விப்பட்டோம், எங்களைப் பார்த்து, முதல்வர், துணை முதல்வர் பயப்படவேண்டாம் நாங்கள் அவர்களைப் போல் குறுக்கு வழியில் செல்ல மாட்டோம் என்று சொன்னார் டிடிவி தினகரன்.
திமுக ஆட்சிக்கு வர கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக எதையும் செய்வோம். அதிமுக பொது குழுவை கூட்ட பொதுச்செயலாளர் சசிக்கலாவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று கூறினார் டிடிவி தினகரன்.
இதனிடையே வேலூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி, அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். டிடிவி தினகரன் 10 ஆண்டுகள் கட்சியில் கிடையாது, ஜெயலலிதா அவரை நீக்கியிருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை கைப்பற்ற டிடிவி தினகரன் முயற்சி செய்தார் என்றும் தெரிவித்தார்.
அதிமுகவை கைப்பற்றி திமுகவிற்கு மறைமுகமாக உதவ முயற்சிப்பவர்களின் முயற்சி சுக்குநூறாக முறியடிக்கப்படும். திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் சதி திட்டம் தீட்டுகின்றனர். மறைமுகமாக உதவி செய்யும் சதி திட்டத்தை முறியடிப்போம். சதிவலையை தூள்தூளாக உடைப்போம் என்றும் சசிகலா மீது மறைமுக தாக்குதல் நடத்தினார் முதல்வர் பழனிச்சாமி.
டிடிவி தினகரனை நம்பி சென்றால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும். அதிமுகவை கைப்பற்ற நினைப்பவர்களை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்கள் பதவி இழந்து நடுரோட்டில் நிற்கின்றனர் எனவே யாரும் அவரை நம்பி சென்று விட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் முதல்வர்.
சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று ஏற்கனவே முதல்வர் கூறியுள்ள நிலையில் டிடிவி தினகரனை நேரடியாக விமர்சித்தும், சசிகலாவை மறைமுகமாக தாக்கியும் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.


Click it and Unblock the Notifications
