பாஜக ஈயம்.. பித்தளை திமுகவாம்.. “தனித்து நின்று எதிர்க்க திராணி இருக்கா?” திமுகவுக்கு பகிரங்க சவால்!
சென்னை : திமுகவுக்கு தைரியமிருந்தால், திராணியிருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடட்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சவால் விடுத்துள்ளார். 'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை' என்பது போல், இதுவரை வெற்றி பெற்ற ஒரு தேர்தலில் கூட தனித்து போட்டியிட தைரியம் இல்லாத ஸ்டாலின் பாஜகவை விமர்சிக்கிறார் என பாஜக நாராயணன் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக பற்றி பேட்டியில் பேசிய விஷயங்களுக்கு பாஜகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் முதுகில் சவாரி செய்துதான் சொற்ப எம்.எல்.ஏக்களை பாஜகவால் தமிழகத்தில் பெற முடிந்துள்ளது என ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
அதற்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். 1967 முதல் தி.மு.க ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை என அண்ணாமலை சாடியிருந்தார். இந்நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார்.

பாஜக திட்டம்
20 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2021ல் தமிழகத்தில் 4 எம்.எல்.ஏக்களைப் பெற்ற பாஜக, அடுத்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப்போவதாகச் சொல்லி வருகிறது. வரும் எம்.பி தேர்தலில் 25 தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். தமிழ்நாட்டில் பாஜகவை பலப்படுத்தும் வகையில், அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைக்கும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். திமுக அரசுக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்றும் அரசியலை தீவிரப்படுத்தியுள்ளது பாஜக.

தோளில் ஏறி
இந்நிலையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "அதிமுகவை பாஜக பயமுறுத்தி குளிர்காய்கிறது. தமிழ்நாட்டில் பாஜக பிரதான எதிர்க்கட்சி அல்ல. சொந்தக்காலில் நின்று அவர்களால் வெற்றி பெற முடியாது. 2001 மாநில சட்டமன்றத் தேர்தலில், அக்கட்சி திமுகவின் தோளில் ஏறி நான்கு எம்.எல்.ஏக்களைப் பெற்றது. இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு அ.தி.மு.கவின் முதுகில் சவாரி செய்து 2021ல் மீண்டும் நான்கு எம்.எல்.ஏக்களைப் பெற்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை பா.ஜ.கவின் பலம் இதுதான்" எனத் தெரிவித்திருந்தார்.

பலம் இல்லை
மேலும், "அதிமுகவை பயமுறுத்தி, பணிய வைத்து அதில் குளிர்காய நினைக்கிறது பாஜக. மற்றபடி, தமிழ்நாட்டில் அவர்கள் வளரவில்லை. பாஜக வளராமல் பாஜகவினரே பார்த்துக் கொள்வார்கள். மேலும், மத்தியில் ஆளும்கட்சியாக இருப்பதால் இங்கு பப்ளிசிட்டி தாராளமாக தரப்படுகிறதே தவிர, தமிழ்நாட்டில் அவர்களுக்கு இருக்கும் பலத்தை வைத்து அல்ல. தேர்தல் வெற்றிக்காக பாஜக எந்தவித இழிவான காரியத்தையும் செய்வார்கள்" என ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அண்ணாமலை விடுத்த சவால்
இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது. 1967 ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த பலத்தில் அல்ல. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல, 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே. 1967லிருந்து, தி.மு.க ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் மு.க.ஸ்டாலின், கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை
இந்நிலையில் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது - முதல்வர் மு.க.ஸ்டாலின். 'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை' என்பது போல், இதுவரை வெற்றி பெற்ற ஒரு தேர்தலில் கூட தனித்து போட்டியிட தைரியம் இல்லாத, திராணி இல்லாத, தெம்பில்லாத ஒரு கட்சி திமுக. 2014ல் கூட்டணி வைத்து போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாத கட்சி திமுக. சவால் விடுகிறோம். திமுகவுக்கு தைரியமிருந்தால், தெம்பிருந்தால், திராணியிருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடட்டும்" என சவால் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications