கூமுட்டை.. சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ.. விஜயை மறைமுகமாக விமர்சித்த சீமான்
சென்னை: ‛‛அன்பு என்றால் அன்பு. வம்பு என்றால் வம்பு.. நீங்கள் வெட்ட நினைக்கும்போதே வெட்டி முடிக்கிற வீர மறவர்கள் நாங்கள். எங்கள் லட்சியத்துக்கு எதிராக பெற்றவர்களே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது. அண்ணனும் கிடையாது. உங்களிடம் இருப்பது கொள்கை இல்லை. கூமுட்டை. அழுகின கூமுட்டை.. ஒன்று ரோட்ல இந்த பக்கம் நில்லு. இல்லை அந்த பக்கம் நில்லு. நடுவுல நின்னா லாரில அடிபட்டு செத்துப்போவ'' என்று நடிகர் விஜயை மறைமுகமாக கடுமையாக சீமான் விமர்சனம் செய்தார்.
நவம்பர் ஒன்றாம் தேதியை ஆண்டுதோறும் நாம் தமிழர் கட்சி ‛தமிழ்நாடு நாளாக' கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ‛தமிழ்நாடு நாள்' கொண்டாட்டத்துக்கான பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சோழிங்கநல்லூரில் இன்று நடந்தது.

இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் நடிகர் விஜயை, சீமான் நேரடியாக விமர்சனம் செய்தார். நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று பேசியதை காட்டமாக சீமான் விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக சீமான் பேசியதாவது: அன்பு என்றால் அன்பு.. வம்பு என்றால் வம்பு.. சாதாரண வம்பு இல்லை உடன் பிறந்தார்களே.. கொடிய வம்பு.. நீங்கள் வெட்ட அரிவாளை எடுக்கும்போது விழுந்து கும்பிடுகிற ஈனப்பிறப்புகள் அல்ல நாங்கள். நீங்கள் வெட்ட நினைக்க எண்ணும்போதே வெட்டி முடிக்கிற வீர மறவர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எங்கள் முன்னவர்கள் ஒன்றை தான் கற்று கொடுத்து உள்ளார்கள். உண்மையை பேசு. அதை உரக்க பேசு. உறுதியாக பேசு. இறுதி வரை பேசு என்பது தான். இதுதான் எங்கள் கோட்பாடு.
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்
பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு
ஞாபகம் செய் முழங்கு சங்கே!
என்று பாடியவனின் பேரன்டா நான். இது சினிமா பஞ்ச் டயலாக் இல்லை தம்பி. நெஞ்சு டயலாக் இது. நெஞ்சு டயலாக்... இதயத்தில் நெருப்பு எரிகிறபோது சில பொறிகள் வாய்வழியாக வந்து விழும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் என் இனம் தூக்கி சுமந்து வருகிற வலியின் மொழிதான் எங்களின் மொழி. விடுதலை பெற்றவர் பேசுவதற்கும், அடிமை பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. வேறுபாடு உண்டு ப்ரோ. எங்கள் கோட்பாடு ஒன்று தான். எங்கள் லட்சியத்துக்கு எதிராக பெற்றவர்களே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது. அண்ணனும் கிடையாது.
இது கொள்கை இல்லை. கூமுட்டை.. அதுவும் அழுகின கூமுட்டை. What bro.. Its very wrong bro. ஒன்று சாலையில் அந்த ஓரத்தில் நில்லு. இல்லைனா சாலையில் இந்த ஓரத்தில் நில்லு. நடுவில் நின்றால் சாலையில் லாரி அடிச்சி செத்துப்போவ பார்த்துக்கோ. தன் இன பாலகன். தன் மார்பிலேயே பால் குடித்தவர். தன் மடியிலேயே தவழ்ந்தவன் இறந்து விட்டானே என்று அழுது துடிப்பது தமிழ் தேசியம்.
என் தங்கை இசை பிரியா கொல்லப்பட்டு கிடந்தபோது துடித்தது தமிழ் தேசியம். தூர இருந்து சிரித்தது திராவிடம். இரண்டும் ஒன்றா. இரண்டும் ஒன்றா.. உடலில் நெருப்பு கொட்டி வெந்தது வீர தமிழன் முத்துகுமார். அது தமிழ் தேசிய பெரும் நெருப்பு. கடற்கரையில் தலைக்கு ஒரு குளிரூட்டி. காலுக்கு ஒரு குளிரூட்டி. தலைமாட்டில் மனைவி.. கால்மாட்டில் துணைவி என்று போலி உண்ணாவிரதம் நடத்துவது திராவிடம். இரண்டும் ஒன்று. '' என ஆக்ரோஷமாக விமர்சனம் செய்தார். அதனை கேட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். சீமானின் இந்த பேச்சு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications