கொரோனா 2வது அலை- அலட்சியத்தால் விஸ்வரூபம்... 2022-ல் இயல்பு நிலைமை? டாக்டர் ராமசுப்பிரமணியன்
சென்னை: முதலாவது கொரோனா அலை தாக்கத்துக்குப் பின்னர் நாம் அலட்சியமாக இருந்தோம்.. இதனால் கொரோனா வைரஸ் உருமாறி மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 2022-ல் இயல்பு நிலைமை திரும்பும் என அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜே. ரவீந்தரன் முன்முயற்சியில் கொரோனா பரவல் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை மூத்த மருத்துவர் டாக்டர் ராமசுப்பிரமணியன் பங்கேற்றார்.
தொடக்கத்தில் வரவேற்புரையாற்றிய வழக்கறிஞர் ரவீந்தரன், நடிகர் விவேக் மறைவுக்கும் கொரோனாவால் ஆஷிஷ் யெச்சூரி மறைந்ததற்கும் இரங்கல் தெரிவித்தார். பின்னர் டாக்டர் ராமசுப்பிரமணியன் பேசியதாவது:

கட்டுப்பாடுகளில் அலட்சியம்
இந்தியாவில் கொரோனா முதல் அலை கடந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கியது. இந்த கொரோனா முதலாவது அலை இந்த ஆண்டு பிப்ரவரியில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து கொரோனா கால கட்டுப்பாடுகள் அனைத்தையும் நாம் மறந்துவிட்டோம். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்பதில் இருந்து விலகிவிட்டோம். பார்கள், ஏசி விடுதிகள் என அனைத்தும் திறந்துவைத்தோம்.

கொரோனா அலைகள்
இப்போது கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலக நாடுகளில் 3-வது 4-வது கொரோனா அலைகள் வந்துவிட்டன. நம்மை கொரோனா 2-வது அலை இப்போது தாக்கி வருகிறது.

அன்று ஸ்பானிஸ் ப்ளூ
இப்போதைய நிலைமையை 1918-ல் ஸ்பானிஸ் ப்ளூ ஏற்படுத்திய தாக்கத்துடன் ஒப்பிடலாம். அப்போது முதலாவது ஸ்பானிஸ் ப்ளூ தாக்கம் இருந்தபோது மக்கள் அலட்சியமாக இருந்தனர். ஆனால் 2-வது தாக்கத்தின் போது அதன் தாக்கம் உக்கிரமாக இருந்தது. இதனால் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டது.

ஸ்பானிஸ் ப்ளூவும் கொரோனாவும் ஒன்றா?
இருந்த போதும் ஸ்பானிஸ் ப்ளூவும் கொரோனா வைரஸும் ஒன்று அல்ல. ஸ்பானிஸ் ப்ளூ ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும். கொரோனா வைரஸோ ஒருவரிடம் இருந்து ஒரு சமூகத்துக்கே பெருந்திரளான எண்ணிக்கையில் பரவக் கூடியது. கொரோனா வைரஸின் 3-வது அலை இவ்வளவு மோசமாக இருக்காது என நினைக்கிறோம்.

என்ன நிலைமை மாற்றம்?
முதலாவது கொரோனா அலை தாக்கத்தின் போது மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டோம். கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. ஆனால் இப்போது கொரொனா பரிசோதனை எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதேநேரத்தில் சிகிச்சை முறையிலும் ஏராளமான மாறுபாடுகள் வந்துவிட்டன. தனியார் மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்கின்றனர்; இன்னமும் சிலர் வீடுகளிலேயே அனைத்து சிகிச்சைகளையும் எடுக்கவும் முயற்சிக்கின்றனர். இது போன்ற நிகழ்வுகள் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

கொரோனா தடுப்பூசி அவசியம்
தற்போதைய நிலையில் மிகவும் நாம் கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக அனைவரும் தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். குளிர்ச்சியான பொருட்கள், குளிர்ச்சியான வாழ்வியலை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். உடல்வலி, காய்ச்சல்தானே என அலட்சியமாக இருக்க வேண்டாம். தற்போதைய ஆண்டு முழுவதும் நாம் தடுப்பூசிகள் போடுவது போன்ற நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி கொண்டு வருகிறோம். இது இந்த 2021-ம் ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என நினைக்கிறோம். சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம் 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் அனேகமாக நாம் இயல்பு நிலைமைக்கு திரும்பக் கூடும். இவ்வாறு டாக்டர் ராமசுப்பிரமணியன் உரையாற்றினார். பின்னர் வீட்டு மருத்துவம், நாட்டு மருத்துவம், தடுப்பூசிகள் செயல்பாடு உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார் டாக்டர் ராமசுப்பிரமணியன்.












Click it and Unblock the Notifications